கோவை சவுரிபாளையத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் இருந்து வெளியே வரும் கழிவுகள் அனைத்தும் அங்குள்ள 11 அடி ஆழ செப்டிக் டேங்கில் உள்ளது. அதை 2 வாரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று காலை செப்டிக் டேங்கில் தேங்கி இருக்கும் கழிவுகளை சுத்தம் செய்ய கோவை சுங்கம் சிவராம் நகரை சேர்ந்த தொழிலாளி மோகனசுந்தரலிங்கம் ( வயது 37) தலைமையில் ராமு ( வயது 21 )குணா ( வயது 20 )ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் மூடியை அகற்றிவிட்டு கழிவுகளை சுத்தம் செய்ய தொடங்கினார்கள். மாலை வரை 5 லோடு கழிவுகள் எடுத்து சுத்தம் செய்யப்பட்டன. பின்னர் அந்த தொட்டிக்குள் 4 அடிவரை கழிவுகள் தேங்கி நின்றது. அவற்றை சுத்தம் செய்வதற்காக ராமு, குணா ஆகியோர் தொட்டிக்குள் இறங்கினார்கள். இதை மோகன சுந்தரலிங்கம் மேலே நின்று கவனித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் தொட்டிக்குள் இறங்கிய 2 பேரும் திடீரென்று மயங்கி விழுந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோகனசுந்தரலிங்கம் உள்ளே இறங்கி 2 பேரையும் மீட்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவரும் திடீரென்று மயங்கி விழுந்தார். இதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலன் அளிக்காமல் மோகனசுந்தரலிங்கம் இறந்தார். ராமு, குணா ஆகியோருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள் .இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாப பலி – 2 பேர் மருத்துவமனையில் அனுமதி..
