ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு… போலீஸ் காவலில் கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்..!

ளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம், கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத் போலீஸ் காவலில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே கடந்தவாரம் பெட்ரோல் குண்டு வீச முற்பட்டவரை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து மேலும் 2 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் கருக்கா வினோத் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

கருக்கா வினோத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124ல் சேர்ப்பது குறித்து விசாரணைக்கு பிறகே முடிவு செய்யப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனிடையே கருக்கா வினோத்தை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி காவல் துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிண்டி காவல்துறை சார்பில் 3 நாள்கள் காவல் வழங்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கருக்கா வினோத் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது ‘நான் தான் பெட்ரோல் குண்டு போட்டேன், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகளாக மேல் இருப்பவர்களை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என்று கருக்கா வினோத் கோஷமிட்டபடியே நீதிமன்றத்திற்குள் சென்றார்.

இதனைத்தொடர்ந்து அக். 30 முதல் நவம்பர் 1-ம் தேதி வரை போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீஸ் காவல் எடுக்கப்பட்டுள்ள நிலையில் கிண்டி போலீசார் கருக்கா வினோத்தை பாதுகாப்போடு அழைத்து சென்றனர். இந்த நிலையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத் போலீஸ் காவலில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த சமயத்தில் தினமும் செய்திதாள் படிக்கும் போது நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது போன்ற செய்தி தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதால் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் தனது மகன் தற்போது ஆறாம் வகுப்பு படித்து வருவதால் அவனை மெடிக்கல் காலேஜ் சேர்க்க வேண்டும் என்ற ஆசை இருப்பதால் நீட் தேர்வு இருந்தால் அவனது ஆசை பறிபோகி விடும் என்ற எண்ணத்தில்தான் வெடிகுண்டு வீசியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பி எப் ஐ அமைப்பினருக்கும், தனக்கும் எந்த தொடர்புமில்லை, ஒரே நேரத்தில் ஜாமீனில் வெளியே வந்தோம் அவ்வளவுதான் எனவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசிகள் சிறையில் இருப்பதால் அவர்கள் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாகவும் அவர்களை உடனே வெளியே விட வேண்டும் எனவும் அதன் கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என வாக்குமூலத்தின் கருக்கா வினோத் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

சிறையில் இருந்து வெளியே வந்ததற்கு பிறகு யாரையும் சந்திக்கவில்லை என கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்துள்ளார். மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து கிண்டி போலீசார் கருக்கா வினோத்திடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.