சென்னை: அண்ணாமலைக்கு 15 நாட்கள் அவகாசம் , அதற்குள் திமுக சொத்துக்கான பத்திரங்களை வெளியிடுங்கள் என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்எஸ் பாரதி சவால் விடுத்து உள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்தார். திமுகவினரின் சொத்து பட்டியல்கள் என்று குறிப்பிடப்படும் எக்ஸல் சீட் ஒன்றை அவர் வெளியிட்டார்.
அதேபோல் முதல்வர் ஸ்டாலின் மீதும் சில புகார்களை அண்ணாமலை பிரஸ் மீட்டில் அவர் வைத்தார். திமுக மீது சரமாரி புகார்களை வைத்தார்.
இன்னொரு பக்கம் பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம்தான் தற்போது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் ஹாட் டாப்பிக். அவர் கையில் கட்டி இருக்கும் பெல் அண்ட் ராஸ் நிறுவனத்தின் ரபேல் வாட்ச் இந்திய மதிப்பில் 4.40 லட்சம் ரூபாய் கொண்டது.
இதற்கான பில் ஒன்றையும் அவர் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டினார். இதை அண்ணாமலை வாங்கியது எப்படி? என்ற கேள்வியைத்தான் திமுகவினர் முன் வைத்து வருகின்றனர். இதற்கான பில்லையும் அண்ணாமலை இன்று காட்டினார்.
இந்த நிலையில் அண்ணாமலைக்கு 15 நாட்கள் அவகாசம் , அதற்குள் திமுக சொத்துக்கான பத்திரங்களை வெளியிடுங்கள் என்று என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்எஸ் பாரதி சவால் விடுத்து உள்ளார். ஆர்எஸ் பாரதி தனது பேட்டியில்,
செய்தியாளர்கள் நேரத்தை அண்ணாமலை வீணடித்துவிட்டார். சாலமன் பாப்பையா பட்டிமன்றம் போல காமெடியாக இருந்தது அண்ணாமலை பேச்சு . அண்ணாமலை பேச்சு சிரிப்பை வரவழைத்தது.
அவர் எல்லாம் எப்படி ஐபிஎஸ் ஆனார், எப்படி பாஸ் ஆனார் என்ற கேள்வி வருகிறது. தேர்தலில் போட்டியிட்டவர்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்பது விதி.
திமுக சார்பாக போட்டியிட்டவர்களும் சொத்து விவரங்களை வெளியிட்டனர். அதில் பொய் சொல்லி இருந்தால் நடவடிக்கை எடுக்கும் விதி முறை இருக்கிறது.
ஆனால் அண்ணாமலை எதையோ சொல்லி பூ சுற்றுகிறார். அண்ணாமலை எங்காவது ஊழல் புகார் பற்றி பேசி இருக்கிறாரா? . யார் யார் சொத்தையோ எங்கள் தலைமேல் சேர்த்து எழுதி இருக்கிறார்.
அப்படி வெளியிடப்பட்ட விவரங்களை இவர் சொத்து மதிப்பு என்று காட்டுகிறார். யார் யாருக்கோ சொந்தமான சொத்துக்களை இவர்களுக்கு சொந்தம் என்று கூறுகிறார். சம்பந்தப்பட்ட நபர்கள் அவரை கோர்ட்டுக்கு அழைப்பார்கள்.
அவர் ரபேல் பில்லை காட்டவில்லை.. வெறுமனே சீட்டு ஒன்றை காட்டி உள்ளார். அவர் காட்டியது பில் கிடையாது. ஜெகத்ரட்சகனிடம் இவ்வளவு சொத்து என்று சொல்லி இருக்கிறார். அவர் என்ன பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறாரா? அவர் பல காலமாக தொழில் அதிபர்.
மோடி, நிர்மலா சீதாராமன் நினைத்தால் இதில் நடவடிக்கை எடுக்கலாமே. அண்ணாமலை என்ன மோடி மீது குற்றச்சாட்டு வைக்கிறாரா? என்ன இது? அவர் இப்படி பேசலாமா?
அண்ணாமலைக்கு 15 நாட்கள் அவகாசம். திமுக சொத்துக்கான பத்திரங்களை வெளியிடுங்கள். திமுகவிற்கு 1408 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது என்று கூறி உள்ளீர்கள். அதற்கான ஆதாரங்களை 15 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று ஆர்எஸ் பாரதி சவால் விடுத்துள்ளார்..