கோவை: புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினத்தைச் சேர்ந்தவர் முகமது சாலிக் (வயது 39). இவர் சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் அதிகாலை 4.30 மணிக்கு வந்து இறங்கினார். அப்போது விமான நிலைய அதிகாரிகள் அவரை சோதனை செய்தபோது 200 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.
உடனடியாக அவரை மேல் விசாரணைக்காக அழைத்தனர். அப்போது அவர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து தனது பாஸ்போர்ட், விசாவை கிழித்து வீசினார். இதை சற்றும் எதிர்பாராத அதிகாரிகள் அவரை கைது செய்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் இவரிடம் விசாரணை செய்த போது இவர் அடிக்கடி அரபு நாடுகளுக்கு சென்று வருவதும், அங்கிருந்து தங்கத்தை கடத்தி வருவதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாகவே தனது பாஸ்போர்ட்டை கிழித்ததாகவும், அவர் எந்தெந்த நாடுகளுக்கு சென்று வந்தார் என்ற தகவல்கள் அந்த பாஸ்போர்ட்டில் பதிந்து இருப்பதனை அதிகாரிகள் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் கிழித்ததாக ஒப்புக்கொண்டார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த வாலிபரிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.