நாட்டுப்புற கலைஞர்களுக்கு குட் நியூஸ்… தமிழகம் முழுவதும் நம்ம ஊர் திருவிழா!!

மிழக கிராமிய கலைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சென்னை சங்கமம் திருவிழா, இந்த ஆண்டு மே மாதம் 8 முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது.

நாட்டுப்புற கலைகள், இசை, நாடகம், நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறும்.

நவ நாகரிக வளர்ச்சி ஒரு பக்கம் உச்சத்தை தொட்டு வரும் நிலையில், தமிழக கிராமிய கலைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும், அதில் பங்கேற்கும் கலைஞர்களுக்கு உதவிடும் வகையிலும் தமிழக அரசு சார்பாக சென்னையில் பொங்கல் திருநாளையொட்டி சென்னை சங்கமம் நடத்தப்படும் 4 நாட்கள் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்வில் ஆயிரக்கணக்கான நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.

அந்த வகையில் இந்த கலையை தமிழகம் முழுவதும் மக்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு முக்கிய முடிவு அறிவித்துள்ளது. அதன் படி, தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில், “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” நடத்துவது போன்று மாநிலத்தின் 8 முக்கிய நகரங்களில் இவ்வாண்டு மே மாதம் சங்கமம் -நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட உள்ளது. அதன் படி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், திருச்சிராப்பள்ளி நடைபெற உள்ளது.

இந்த சங்கம கலை நிகழ்வில், நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள், இசை, நாடகம், பாரம்பரிய நடனங்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், திருக்கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு, பரதநாட்டியம், சிலம்பாட்டம், பழங்குடியினர் நடனம், மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் கலைஞர்களுக்கு வருகிற மார்ச் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் முதற்கட்ட தேர்வுக்கான விடியோ பதிவு 38 மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விண்ணப்பிக்க www.artandculture.tn.gov.in](https://www.artandculture.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலை விழாவில் தேர்வுக்கு பங்குபெறும் கலைக்குழுக்களுக்கு மதிப்பூதியம் மற்றும் பயணச் செலவுகள் வழங்கப்படமாட்டாது என கூறப்பட்டுள்ளது. இந்த 8 மண்டலங்களில் சிறப்பான நிகழ்ச்சிகள் நடத்திய கலைக்குழுக்கள் வருகிற 2026 ஆம் ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் பங்குபெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.