சென்னை: ஆட்சி அமைப்பதற்காக கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கிலோ கணக்கில் தங்கம், பணம் வழங்கப்பட்டதாக அதிர்ச்சி தகவலை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனத் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வமும் எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணையத் தயார் என கூறி வருகிறார். அதிமுக வழக்குகளில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.
ஆனால் அதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா?” என முற்றுப் புள்ளி வைத்தார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சியை தான் தான் காப்பாற்றியதாகவும், தான் தர்ம யுத்தம் மேற்கொண்டதற்கான காரணத்தையும் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ள பேட்டியில், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி – டிடிவி தினகரன் இடையே கருத்து மோதலால் 36 சட்டமன்ற உறுப்பினர்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். அந்த நேரத்தில் நான் தர்மயுத்தம் நடத்தியபோது 11 சட்டமன்ற உறுப்பினர்கள், 11 எம்.பிக்கள் என்னுடன் இருந்தனர்.
அப்போது வேலுமணி, தங்கமணி ஆகியோர் என்னைச் சந்தித்து கட்சி இணைய வேண்டும் எனக் கூறினர். டிடிவி தினகரனிடம் இருந்த 36 எம்.எல்.ஏக்களும், என்னுடன் இருந்த 11 எம்.எல்.ஏக்களும் இணைந்தால் ஆட்சி பறிபோய்விடும் என்ற அபாயகரமான நிலைமை இருந்ததால் தான் அப்போதைய 2 அமைச்சர்களும் என்னை சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.
அதிமுக ஆட்சி இக்கட்டான நிலைக்குச் சென்றுவிடும் எனக் கருதி நானும் இணைப்புக்கு தயாரானேன். அப்போதே, டிடிவி தினகரன் உடன் இருந்த 36 எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 18 எம்.எல்.ஏக்கள் ஆகிவிட்டது. கட்சி இணையப்போவதால் பலர் அணி மாறிவிட்டனர். அப்போது நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தினகரன் தரப்புக்கு ஆதரவு அளித்திருந்தால் ஆட்சியே பறிபோயிருக்கும்.
அதற்கு முன்னதாக கூவத்தூரில் பல அநியாயங்கள் அக்கிரமங்கள் நடந்தன. எத்தனை கிலோ தங்கம் அங்கு பரிமாற்றப்பட்டது? எத்தனை கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டது? என்பது எங்களுக்குத் தெரியும். எம்.எல்.ஏக்களுக்கு பணம், நகை கொடுத்துத்தான் ஆட்சி அமைப்பதற்குரிய எம்.எல்.ஏக்களை கைவசப்படுத்தினார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழிநடத்திய கட்சியை இப்படி ஒரு தவறான பாதையில், ஜனநாயக விரோதமாக கொண்டு செல்கிறாரே எடப்பாடி பழனிசாமி என்றுதான் அன்றைக்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தோம்.” எனத் தெரிவித்துள்ளார்.