சென்னை: அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் அந்த நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுவதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்றிரவு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில், கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, தன் மீதான விசாரணைக்கும் அவர் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். தற்போது நீதிமன்ற காவலில் அமலாக்கத் துறை விசாரணையில் உள்ளார். அதுமட்டுமில்லாமல், தமிழக காவல் துறையிலும் அவர் மீது சில வழக்குகள் உள்ளன. இதனால் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். எனவே, உடனடியாக அவரை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். “அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது. சட்ட ரீதியாக இதனை நாங்கள் சந்திப்போம்” என்று முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பலவும் ஆளுநரின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. அதேநேரத்தில் ஆளுநரின் நடவடிக்கைக்கு பாஜக ஆதரவு தெரிவித்தது.
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அந்த நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுவதாக ஆளுநர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் அனுப்பி உள்ள கடிதத்தில், “அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையைப் பெறுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, அட்டர்னி ஜெனரலை நான் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவர் தனது கருத்தை தெரிவிக்கும் வரை, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்குமாறும், ஜூன் 28-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார். பிறகு செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அமலாக்கத் துறையினர் 8 நாட்களுக்கு செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையிலேயே வைத்து விசாரணை நடத்த முதன்மை அமர்வு நீதிபதி அனுமதி அளித்திருந்தார். ஆனால், அவரை மருத்துவமனையில் வைத்து விசாரணை நடத்த முடியவில்லை என்று நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கான நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் அவர் காணொலிக் காட்சி வாயிலாக தனியார் மருத்துவமனையில் இருந்து, நீதிமன்ற விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, ”இப்போது எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு செந்தில் பாலாஜி, ”இன்னும் கொஞ்சம் வலி இருக்கிறது” என்றார். இதையடுத்து, செந்தில் பாலாஜிக்கான நீதிமன்றக் காவலை வரும் ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.