அரசு ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தம்.!!

மிழகத்தில் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு, புதிய ஓய்வூதிய முறை ரத்து உட்பட பல கோரிக்கைகளை செயல்பட வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அதன் அவசியத்தை அரசுக்கு உணர்த்தும் வகையில் இன்று ஒரு நாள் மட்டும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் அரசு பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து அரசு ஊழியர்கள் சங்கம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம் என முதல்வர் கூறியும் இன்னும் நடக்கவில்லை .

புதிய பென்ஷன் திட்டத்தை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் . மாநிலத்தில் அரசு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும், நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனடியாக தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டதன் படி உடனடியாக காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் வழங்கும் முறை மாற்றியமைக்கப்பட வேண்டும். இடைநிலை, முதுநிலை ஆசிரியர்கள் இடையேயான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்குவது, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் உட்பட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான சலுகைகள், திட்டங்கள் குறித்து பட்ஜெட்டிலும் திட்டங்கள் எதுவும் வெளியிடப்படவிலை. இதனால் கடும் அதிருப்தியடைந்த அரசு ஊழியர்கள் சங்கத்தினர் இன்று தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். இந்த நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட துறை ரீதியான சங்கங்கள் கலந்து கொள்கின்றன. அந்தந்த மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் தீர்வு கிடைக்காவிடில் ஏப்ரல் 19 ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.