வளர்ந்து வரும் தென் மாநிலங்கள்… பின்னடைவை சந்திக்கும் மேற்குவங்கம்… பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை..!

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஜி.டி.பி. மற்றும் தனி நபர் வருமானம் அளவில் தென் இந்தியா உயர்ந்துள்ளதும், மேற்குவங்கம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் தாராளமயம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தென் மாநிலங்களின் பங்களிப்பு அதிகமாகியிருப்பதும், தனிநபர் வருமானத்தில் தேசிய சராசரியைவிட உயர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது. அதன்படி தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இந்தியாவின் ஜி.டி.பி.யில் 30 சதவீதத்தை நிறைவு செய்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் குறிப்பாக கிழக்கு மாநிலங்கள் பெரும் போராட்டத்தை எதிர்க்கொள்கின்றன் என்பது தெரியவந்துள்ளது. இதில் பெரும் ஆச்சரியம் ஆரம்பகாலத்தில் பெரும் பொருளாதார பலம் கொண்ட மேற்குவங்கம் மாநிலம், சமீபத்தில் தொடர் சரிவை சந்தித்துவருகிறது. 1960-61 காலத்தில் இந்தியாவின் ஜி.டி.பி.யில் 10.5 சதவீதம் நிறைவு செய்த இந்த மாநிலம் தற்போது 5.6 சதவீதம் என்ற அளவிற்கு குறைந்துள்ளது. ஒரு காலத்தில் இந்த மாநிலத்தின் தனிநபர் வருமானம் என்பது 127.5 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது அது 83.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது வெகுகாலமாக குறைந்த தனிநபர் வருமானம் கொண்ட மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஒடிசாவைவிட குறைவானது என்பது கவனிக்கவேண்டியது.  கடல்சார் நிலவியல் மற்றும் வரலாற்று ரீதியான பலம் பொருந்தியிருந்தும் இந்த சரிவு என்பது, பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக அதன் அதன் தொடர்ச்சியான செயல்திறனுக்கு வழிவகுத்த கொள்கைகள் மற்றும் காரணிகள் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.
பொதுவாக கடல்சார் மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டுவர, மேற்கு வங்கம் பல தசாப்தங்களாக அதன் ஒப்பீட்டளவில் பொருளாதார செயல்திறனில் தொடர்ச்சியான சரிவை சந்தித்து வருகிறது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

சமீபத்திய தசாப்தங்களில் பிஹார் நிலையான இடத்திற்கு வந்திருக்கிறது. ஆனாலும், மற்ற மாநிலங்களை ஒப்பீடுகையில் வளர்ச்சியில் முன்னேற வேண்டும் என அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. ஒடிசா, பின் தங்கிய மாநிலம் எனும் தனது பிம்பத்தில் இருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது.

இந்த அறிக்கையில், இந்தியா ஜி.டி.பி. அதிக பங்களிப்பைத் தரும் மாநிலமான மகாராஷ்டிராவும் பேசப்பட்டுள்ளது. ஆனால், மகாராஷ்டிராவின் ஜி.டி.பி. பங்களிப்பு 15 சதவீதத்தில் இருந்து 13.3 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், மகாராஷ்டிராவின் தனிநபர் வருமானம் என்பது 2024 மார்ச் மாதத்தில் 150.7 சதவீதம் என உயர்ந்துள்ளது.

வட மாநிலங்களான டெல்லி மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அதிலும், டெல்லி தனிநபர் வருமானத்தில் உயர்ந்த இடத்தில் உள்ளது.

இதில் பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு வியக்க வைக்கும் அளவிற்கு உள்ளது. ஒரு காலத்தில் பசுமைப் புரட்சியின் காரணமாக பெரும் லாபம் கண்ட பஞ்சாப், 2000ம் ஆண்டுக்கு பிறகு சரிவை சந்தித்து வருகிறது. அதே நேரத்தில் ஹரியானா பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளது.

ஒரு காலத்தில் பஞ்சாப்பை விட பின் தங்கியிருந்த ஹரியானா தற்போது எப்படி பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளது என்பது குறித்து ஆராயவும் அந்த அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.

வறுமை மாநிலமாக இருந்துவரும், உத்தரப் பிரதேசம் மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்களின் ஜி.டி.பி. பங்களிப்பும் குறைந்துவருகிறது. இதில் 1960 – 61ல் 14 சதவீதமாக இருந்த உத்தரப் பிரதேசத்தின் ஜி.டி.பி.யின் பங்களிப்பு தற்போது 9.5 சதவீதமாக குறைந்துள்ளது.

அதேபோல், அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் மூன்றாவதாக இருக்கும் பிஹார், வெறும் 4.3 சதவீதம் அளவு மட்டும் இந்திய ஜி.டி.பி.யில் தனது பங்களிப்பை தருகிறது என்பதும் தெரியவந்துள்ளது.

தேசிய சராசரியைவிட ஐந்து மாநிலங்கள் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது. இதில், மூன்று தென் மாநிலங்களும், டெல்லி மற்றும் ஹரியானாவும் இடம்பெற்றுள்ளன. அதன்படி தமிழ்நாடு 171.1%, கர்நாடகா 180.7%, தெலுங்கானா 193.6%, டெல்லி 250.8%, ஹரியானா 176.8% எனவும் உள்ளன. இதில் பெரிதும் கவனிக்கப்பட வேண்டியது தெலுங்கானா மாநிலம், 2014 ஜூன் 2ம் தேதி ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானா முதல் ஐந்து இடத்திற்குள் வந்துள்ளது.