காந்திநகர்: குஜராத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பாஜவில் சேர உள்ளதாக கூறப்படுகிறது.
குஜராத் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 156 இடங்களை பாஜ கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பூபேந்திர படேல் தலைமையில் மீண்டும் பாஜ அரசு அமைய உள்ளது. தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களையும், ஆம் ஆத்மி 5 இடங்களையம் கைப்பற்றி உள்ளன. இந்நிலையில், விஸ்வதார் தொகுதி ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் பூபத் பயானி மற்றும் சில எம்எல்ஏக்கள் பாஜவில் சேரக்கூடும் என்ற தகவல் வெளியாகியது. இதுபற்றி பூபத் பயானியிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த பயானி,” சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் பாஜ வெற்றி பெற்றதன் மூலம் பிரதமர் மோடி நாட்டின் பெருமையை உலகம் முழுவதும் பரவ செய்துள்ளார்.
இதற்கு முன் நான் பாஜவில் இருந்தபோது மோடி தலைமையின் கீழ் பணியாற்றி உள்ளேன். நான் வெற்றிபெற்றதையடுத்து மோடி, அமித் ஷா எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொகுதி மக்களின் கருத்துகளை கேட்டு பாஜவில் மீண்டும் சேருவது பற்றி முடிவெடுப்பேன்” என்றார். இவரை தவிர ஆம் ஆத்மியில் உள்ள 4 எம்எல்ஏக்களும் பாஜவின் தொடர்பில் உள்ளதாக கூறப்படுகிறது. 3 சுயேச்சைகள் முடிவு: தேர்தலில் வெற்றி பெற்ற சுயேச்சை எம்எல்ஏக்கள் மாவ்ஜி தேசாய், தர்மேந்திரா வகேலா,தாவல் ஜாலா ஆகியோரும் கட்சியில் சேர உள்ளதாக செய்தி வந்துள்ளது. இவர்கள் 3 பேரும் பாஜவில்தான் இருந்தனர். தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிட்டனர்.