கோவையில் பலத்த மழை… 23 குளங்கள் நிரம்பி வழிந்தது.!!

கோவையில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளுக்கு மழை நீர் புகுந்தது .மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்தால் நொய்யல் ஆற்றில் 300 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அந்த ஆற்றில் உள்ள முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி சாவடி தடுப்பணை நிரம்பி வழிந்தது. இதன் காரணமாக இந்த தடுப்பணியில் உள்ள ராஜவாய்க்கால் மூலம் குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அத்துடன் மழை காரணமாக குளங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் கோவையில் உள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம், முத்தண்ணன் குளம், உள்ளிட்ட குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியே சென்றது..

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- கோவையில் பெய்து வரும் கனமழை காரணமாக கோளராம்பதி, குளராம்பதி, கெங்க நாராயண சமுத்திரம், செங்குளம், இருகூர் குளம், கண்ணம்பாளையம் குளம், சூலூர் பெரிய மற்றும் சிறிய குளம், நரசாம்பதி, கிருஷ்ணாபதி, குறிச்சி உள்ளிட்ட மொத்தம் 23 குளங்கள் நிரம்பி உள்ளன. பேரூரில் உள்ள பெரியகுளம், சொட்டையாண்டி குட்டை, அன்னூர், பெல்லாரி, குன்னத்தூர் பகுதியில் உள்ள குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன .அது போன்று பல்வேறு பகுதிகளில் உள்ள குட்டைகளும் நிரம்பி வருகின்றன. வடகிழக்கு பருவ மழை இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் பெரும்பாலான குளங்கள் நிரம்பிவிட்டன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.