சென்னை: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ரிப்பன் கட்டட வளாகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை இன்று தீவிரமடைந்து தமிழகம் நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் அக்டோபர் 16ம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 17ம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிகனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது. இன்றைய தினத்தைப் பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். சென்னையில் எங்கெங்கு எவ்வளவு மழை பெய்தது? பாதிப்புகளை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வில் சென்னை மேயர் பிரியா, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.