வெளுத்து வாங்கிய கனமழை… கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.!!

கோவையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். கோவையில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாலும் இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதாலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவ மழை கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. பருவமழை துவக்கத்தில் இருந்தே நல்ல மழை பெய்து வருகிறது. பருவ மழை ஆரம்பிக்கும் போதே சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. தற்போது, உள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கர்நாடக மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது வருகிறது. குறிப்பாக கோவை, திருப்பூரில் கனமழை வெளுத்து வாங்கியது.

நேற்று மாலையில் கோவை மாவட்டத்தில் கனமழை கொட்டியது. கோவையில் பல்வேறு இடங்களில் மழையின் காரணமாக வெள்ளம் தேங்கி நிற்கிறது. தாழ்வான சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதான வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். குறிப்பாக கோவையில் நேற்று காலையில் இருந்தே பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த நிலையில் கோவையில் இன்றும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை கருதி இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.