வேலூர், காட்பாடியில் சூறைக்காற்றுடன் கனமழை… மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிப்பு.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

வேலூர்: வேலூர், காட்பாடி பகுதிகளில் சூறைக் காற்றுடன் பெய்த மழையால் ஏராளமான மரங்கள் முறிந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் மட்டும் குறையாமல் இருந்தது. இதற்கிடையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், வெப்ப நிலையும் 105 டிகிரி அளவாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, வேலூரில் நேற்று வெயிலின் அளவு 104.5 டிகிரி அளவாக இருந்தது. பிற்பகல் 3 மணிக்குப் பிறகு திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.

வேலூர், சத்துவாச்சாரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் தடைபட்டது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பூங்காவில் சூறை காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததில் அங்கு நிறுத்தப்பட்ட கார்கள் சேதமடைந்தன. சூறைக்காற்றால் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.