ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் சிறப்பு அந்தஸ்து கோரிய தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது அரசியலமைப்பு சட்டப் பிரிவு, 2019ல் ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜம்மு -காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது, முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்றார்.பதவியேற்றதுடன் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி அமைச்சரவை கூட்டி தீர்மானம் நிறைவேற்றினார். அத்தீர்மானத்திற்கு துணை நிலை கவர்னர் மனோஜ் சின்கா ஒப்புதலும் அளித்தார்.6 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரின் சட்டசபை கூட்டத்தொடர், கடந்த 4ம் தேதி தொடங்கியது. மக்கள் ஜனநாயகக் கட்சியின் எம்.எல்.ஏ., வஹீத் பாரா, ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்தும், அதை மீண்டும் அளிக்கக் கோரியும், தீர்மானம் தாக்கல் செய்தார். இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை விதிகளை மீறி, தீர்மானம் தாக்கல் செய்த பாராவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த நிலையில், இன்றும் அவை கூடியதும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். சிறப்பு அந்தஸ்தை ஆதரித்து இன்ஜினியர் ரஷீதின் சகோதரர் குர்ஷித் அகமது பேனரை காட்டினார். இதனால், ஆத்திரமடைந்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அவரை தாக்க முயன்றனர். இதனால், அவையில் பதற்றம் நிலவியது. அமைதி காக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டும் கேட்க மறுத்ததால், குர்ஷித் அகமது மற்றும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை அவைக்காவலர்கள் சட்டசபையில் இருந்து குண்டுகட்டாக வெளியேற்றினர். இதையடுத்து, அவை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.