மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நாளைய தினம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு தனது தொகுதி பொதுமக்களிடம் மரக்கன்றுகளை கொடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அழைப்பு விடுத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி அறிவுறுத்தலின்படி, மதுரை விமான நிலையம் அருகே மாநாட்டுக்கான பணிகள் 65 ஏக்கரில் நடைபெறுகின்றன. 25 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. 35 ஏக்கரில் சமையலறை, உணவு விநியோக மையங்கள் அமைக்கப்படுகின்றன.
மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை முதல் இரவு வரை சுடச்சுட உணவு பரிமாறப்படுகிறது. மாநாட்டுக்காக 3 லட்சம்சதுர அடியில் பந்தல் அமைக்கப்பட்டது. ஆனால் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், தொண்டர்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக பொதுச் செயலாளர் உத்தரவுப்படி, கூடுதலாக 2 லட்சம் சதுர அடியில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
தேசிய அளவிலான மாநாட்டுக்குகூட இந்த அளவு பெரிய பந்தல் இதற்குமுன் அமைக்கப்படவில்லை. அதேபோல், பல லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுவதும் சாதனையாகவே இருக்கும் என்று கூறினார். நாளைய தினம் மாநாடு நடைபெறும் நாளில் அன்று காலை எடப்பாடி கழக கொடியினை ஏற்றுகிறார். அந்த இடத்தில் கழக அம்மா பேரவை தொண்டர் படையினர் சல்யூட் அடித்து ராணுவ மரியாதை போல் அணிவகுப்பு செய்கின்றனர். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், கழக அம்மா பேரவை செயளாலரும், ஆர்.பி.உதயகுமார் கழக அம்மா பேரவை தொண்டர் படைக்கு பயிற்சியை அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு மாநாடு முகப்பில் அணிவகுப்பு மரியாதை நிறைவடைகிறது.
இது தவிர தொண்டர் படை ராணுவ சிப்பாய் போல அணிவகுக்க உள்ளனர். மேலும் இந்த தொண்டர் படையில் கழக இளைஞர் பாசறை உள்ளிட்ட பல்வேறு அணிகள் அணிகள் தொண்டர் படையில் பங்கேற்க உள்ளது. அதனை தொடர்ந்து மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்களுக்கு இருக்கைகள் ஏற்படுத்தித் தரவும், அவர்களுக்கு வேண்டிய குடிநீர், உரிய வழிகாட்டுதலை தொண்டர் படை சேவை செய்து களப்பணியாற்றும் என்று ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி கொடியேற்றும் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவி வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.10 நிமிடங்கள் வானத்தில் இருந்து பூ மழையாக பொழிய சென்னை மாவட்ட செயலாளர்கள் பால கங்கா, வெங்கடேஷ் பாபு, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்துள்ளனர். பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்தூவி வரவேற்க திட்டமிடப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தங்கி இருக்கும் ஓட்டலில் இருந்து அவர் வெளியே புறப்பட்டு மாநாட்டு பந்தலுக்கு வரும் வரையில் அவரது காருக்கு மேலே ஹெலிகாப்டர் பறந்தவாறு மலர்களை தூவியவாறு வந்து கொண்டே இருக்கும்.
மாநாடு தொடங்கும் ஞாயிற்றுக்கிழமை 8 மணி முதல் ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் கலந்துகொள்ள சேலம், நாமக்கல் கோவை, கிருஷ்ணகிரி, வேலூர், கரூர், கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் கப்பலூர் சுங்கச்சாவடி வழியாக திடலுக்கு வரவேண்டும். சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள், விரகனூர் சுற்றுச்சாலையிலிருந்து விமான நிலை யம் செல்லும் பைபாஸ் சாலை வழியாக வரவேண்டும். தூத்துக்குடி உள்ளிட்ட 5 தென்மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் வளையங்குளம் வழியாக திடலுக்கு வரவேண்டும்.
அனைத்து மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்காக 13 இடங்களில் 300 ஏக்கரில் வாகன நிறுத்துமிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாநாடானது, தமிழகத்தில் ஆட்சி மாற்றத் துக்கான கால்கோல் விழாவாக அமையும் என்று கூறினார். இரவு 8 மணிக்கு மாநாடு நிறைவு பெற்று தொண்டர்கள் பாதுகாப்பாக வீடு செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது. மாநாடு நடத்துவதன் மூலம் மதுரை மட்டுமல்லாது தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் நாங்கதான் மெஜாரிட்டி என்று காண்பிக்க தயாராகி விட்டது அதிமுக.