கோவை: சென்னை போலீஸ் கட்டுப்பட்டு அறைக்கு இன்று காலை ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி டாஸ்மாக் பாரில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக கூறிவிட்டு போனை துண்டித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போத்தனூர் போலீசார் கட்டுப்பட்டு வரைக்கும் வந்த போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரம் செந்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த பீர் முகமது என்கிற பச்சை மிளகாய் பீர் முகமது (வயது 44) என்பது தெரியவந்தது. இவர் டாஸ்மாக் கடைக்கு சென்று இலவசமாக மது கேட்டு தராததால் குடிபோதையில் போலீஸ் கட்டுப்பட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது. இவர் இதற்கு முன்பு மெரினா கடற்கரை உள்பட சில இடங்களில் வெடிகுண்டு வெடிக்க உள்ளதாக மிரட்டல் விடுத்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் மீது போத்தனூர், குனியமுத்தூர், உக்கடம், சென்னை உள்பட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் டாஸ்மாக் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் பீர்முகமதை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் கார் வெடிகுண்டு சம்பவம் தற்போது தான் மெல்ல மக்கள் மறக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் கோவையில் பரபரப்பு ஏற்படுத்தியது.