கோடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் இந்த எஸ்டேட்டுக்குள் நுழைந்தது. உள்ளே சென்ற அந்த கும்பல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கும் அறைகளில் இருந்து பல்வேறு பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது. இது தொடர்பாக சோலூர் மட்டம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், கொள்ளை கும்பலுக்கு தலைமை வகித்த சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். மேலும், கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். 5 ஆண்டுகளாக இவ்வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் செல் போன்கள் மற்றும் சிம்கார்டுகளை ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதியிடம் சிபிசிஐடி தரப்பு மனுதாக்கல் செய்தனர். அதையடுத்து கடந்த ஜூலை மாதம் பிஜின்குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் 8 செல்போன்கள் மற்றும் 4 சிம்கார்டுகள் கோவையில் உள்ள தொழில் நுட்ப ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அந்த ஆய்வகத்தில் கடந்த 4 மாதங்களாக ஆய்வு செய்த நிலையில், அதில் உள்ள தகவல்கள் மற்றும் தகவல் பரிமாற்ற விவரங்களை அறிக்கையாகவும், ஆய்வு செய்யப்பட்ட செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும் பென் டிரைவ்கள் ஆகியவற்றை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்தும் ஆய்வக அதிகாரிகள் நேற்று உதகையில் உள்ள நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.