நோன்பு துறப்பில் இஸ்லாமியர்களுடன் பங்கேற்ற இந்து மடாதிபதிகள், கிருத்துவ பாதிரியார்கள் – மலர்ந்த மத நல்லிணக்கம்
வேற்றுமையில் ஒற்றுமை என்ற மாண்பை, மரபை தத்துவமாக வைத்திருப்பது இந்தியா. இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள் என எண்ணற்ற மதங்கள் இந்தியாவில் இருந்தாலும், யாவரும் இந்தியர்களே என்ற எண்ணத்தை ஓங்கி ஒலிக்கின்ற தத்துவமே வேற்றுமையில் ஒற்றுமை. இந்த நிலையிலே சமீபகாலமாக ஒரு அசாதாரண மத மோதல் போக்குகள் நடந்து வந்தாலும், கசப்பான நிகழ்வுகளை புறம் தள்ளி மத நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் போற்றுகின்ற வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூரில் மத நல்லிணக்க ரமலான் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மத தலைவர்கள் முன்னிலையில் அரங்கேறின. கோயமுத்தூர் சாய்பாபா காலனி பகுதியில் முதன் முறையாக பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சியாக அரங்கேறின. இந்து மடாதிபதிகள், கிருத்துவ பாதிரியார்கள், இஸ்லாமிய குருமார்கள் உள்ளிட்டோர் பங்கேற்று நோன்பு கஞ்சி பருகி நோன்பு துறந்தனர். இந்த நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றது பலரது கவனத்தை ஈர்த்திருக்கின்றன. மத நல்லிணக்கத்தை பேணுகின்ற நிலைக்கு நாடு தள்ளப்பட்டு இருக்கும் நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்த வேண்டியது அவசியமாக இருக்கின்றன. சமத்துவம், சகோதரத்துவம், தழைத்தோங்குகின்ற விதமாக, மத நல்லிணக்கம் மலரும் விதமாக இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஹாஜி. ஜெ. முகமது ரஃபி தலைமையில் அவரின் அமைப்பு சார்பாக கோவையில் மத நல்லிணக்க பொங்கல், தீபாவளி, மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் உள்ளிட்ட ஏராளமான மதப் பண்டிகைகள் பல்வேறு மத தலைவர்களுடன் இணைந்து மத நல்லிணக்க விழாவாக கொண்டாடி வருகின்ற நிலையில் இப்தார் நோன்பு துறப்பு நிகழ்வினை மத நல்லிணக்க நோன்பு துறப்பாக கொண்டாடினர் .
இந்த நிகழ்ச்சியில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர், விழா ஏற்பாட்டாளரான ஹாஜி. ஜெ. முகமது ரஃபி, ஒருங்கிணைப்பாளர் எம். எம். இராமசாமி, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சிரவை ஆதினர் ராமானந்த குமருகுரு சுவாமிகள், ஆயர் டேவிட் பர்னபாஸ் , அருட்தந்தை மை. ஜார்ஜ் தனசேகர், சமூக ஆர்வலர் லீமா ரோஸ் மார்டின் , துணை ஆணையாளர் சந்தீஸ் , உதவி ஆணையாளர் ஃபசினா மற்றும் இந்து , இஸ்லாமிய, கிருத்துவ தலைவர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்