அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரான பொன்முடி

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக அமைச்சர் பொன்முடி அவரது வழக்கறிஞருடன் ஆஜரானார்.கடந்த 2006 முதல் 2011 வரையிலான காலக்கட்டத்தில் நடந்த திமுக ஆட்சியில், தமிழக அமைச்சரவையில், தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சரான பொன்முடி கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தார்.
அமைச்சர் பொன்முடி கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறையை கவனித்து வந்ததால், அவருடைய மகன் கவுதம சிகாமணி, மற்றும் அவரது உறவினர்கள் செம்மண் எடுக்க 2007 பிப்ரவரியில் விண்ணப்பித்திருந்தனர்.அதற்கான அனுமதி 2007 மே மாதத்தில், மிக குறுகிய காலக்கட்டத்துக்குள் வழங்கப்பட்டதாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது. செம்மண் குவாரியில் மண் அள்ள அனுமதிக்கப்பட்ட அளவை மீறி, 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரி செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான் புகார் அடிப்படையில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி ஆகியோருக்கு சொந்தமான 9 இடங்களில் கடந்த ஜூலையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர் சோதனையில் ரூ.41.9 கோடி மதிப்புள்ள வைப்புத் தொகை பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.மேலும், வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பறியதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அன்றைய தினமே, அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் பொன்முடி மற்றும் கவுதம சிகாமணி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் பொன்முடியிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, இன்று (நவ.,30) நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக அமைச்சர் பொன்முடி அவரது வழக்கறிஞருடன் நேரில் ஆஜரானார்.