சென்னை: திருமாவளவன் ஒரு கூட்டணியில் இருக்கிறார். அவர் எப்படி அதிமுக கூட்டணி கதவை அடைக்க முடியும் என்று பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடியின் 121வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, தமிழக பாஜ சார்பில் அக் கட்சியின் மாநில செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் சென்னை திருவல்லிக்கேணி நடுக்குப்பம் பகுதியில் தனியார் மண்டபத்தில், மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பொது மக்களுடன் நிகழ்ச்சியை கண்டுகளித்தார். இதில், பாஜ துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில் கூறியதாவது: கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று கூறி விஜய்யை கூட்டணிக்கு அழைத்த அதிமுக, த.வெ.கவிற்கான கதவுகளை மூடிவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறி இருக்கிறார். திருமாவளவன் ஒரு கூட்டணியில் உள்ளார். அவர் எப்படி அதிமுக கூட்டணியின் கதவை மூட முடியும். அடுத்தவர் கூட்டணி கதவுகளை மூட திருமாவளவன் யார்? திருமாவளவன் முதலில் அவரது வீட்டு கதவை அடைக்கட்டும் அடுத்தவர் வீட்டை பற்றி அவர் கவலைப்பட வேண்டாம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார். முன்னதாக பாஜ சார்பில், நடுக்குப்பம் அவ்வை சண்முகம் சாலையில் மனதின் குரல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் சாலையில் அமைக்கப்பட்ட மேடை, எல்.இ.டி. திரை மற்றும் ஒலிபெருக்கிகளையும் போலீசார் அகற்றினர். இதனால், போலீசாருக்கும், பாஜவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.