சென்னை: கால்பந்து விளையாட்டு வீராங்கனை மாணவி பிரியா உயிரிழந்த வழக்கில் மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதேபோல வேண்டுமானால் காவல்துறையில் சரணடைய வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மாணவி பிரியா உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முன்ஜாமீன் கோரி பிரியாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் நீதிமன்றத்தை நாடினர்.
இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மருத்துவர்கள் தரப்பில், மாணவி பிரியாவுக்கு பின்னர் இரண்டு அறுவை சிகிச்சை செய்ததாகவும் அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள் என்றும் வாதம் வைக்கப்பட்டது. அதேபோல தங்கள் குடும்பத்தினரையும் விசாரணைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள் என்றும், விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருகிறோம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், “இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டுவிட்டது. எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. சரணடைய காவல் நிலையம் செல்வதற்கே எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. நூற்றுக்கணக்கில் மிரட்டல்கள் வருகின்றன” என்று கூறியுள்ளனர்.
நீதிபதி தரப்பில், “தற்போதுதான் சம்பவம் நடந்திருக்கிறது. எனவே விசாரணை நடத்த சிறிது அவகாசம் வழங்க வேண்டும். உங்களுக்கு முன்ஜாமீன் உட்பட எந்த நிவாரணமும் வழங்க முடியாது. வேண்டுமானால் சரணடையுங்கள். அறுவை சிகிச்சை முடிந்து பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு சென்று விட்டேன் என்று எப்படி கூறுகிறீர்கள்?” என்று கேள்வியெழுப்பி முன்ஜாமீனை மறுத்தார். அதேபோல வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் நீதிபதி கூறியுள்ளார். இந்த வழக்கில் முன்ஜாமீன் வேண்டும் என மருத்துவர்கள் சோமசுந்தர் மற்றும் பால்ராம் சங்கர் ஆகியோர் நீதிமன்றத்தை நாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரியா, ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர் மாவட்ட மற்றும் மாநில அளவிலான கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று விளையாடி வந்திருக்கிறார். இந்நிலையில், அவருக்கு மூட்டுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கால் மூட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவ்வாறு இருக்கையில், அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி சில நாட்கள் ஆன பின்னரும் காலில் வீக்கம் குறையவில்லை. மட்டுமல்லாது கால் உணர்வற்ற நிலையில் இருந்துள்ளது.
இதனையடுத்து பிரியா ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், கால் தசைகள் செயலிழந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அறுவை சிகிச்சை செய்த பின்னர் போடப்பட்ட பேன்டேஜ் இறுக்கத்தால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு முதலில் ஒரு கால் முழுவதும் அகற்றப்பட்டது. ஆனாலும், கல்லீரல், சிறுநீரகம் என அனைத்து உறுப்புகளும் ஒன்றன்பின் ஒன்றாக பாதிக்கப்பட்டது.
தசைகள் செயலிழந்து கிழிந்ததால் பிரியாவின் உடலிலிருந்து ‘மையோகுளோனஸ்’ எனும் திரவம் ரத்தத்தில் கலந்தது. பொருவாக இந்த திரவம் சிறுநீரில்தான் வெளியேறும். ஆனால் ரத்தத்தில் கலந்ததால் உடல்நிலை மேலும் மோசமானது. இதனால் பிரியாவுக்கு டையாலிசிஸ் செய்யப்பட்டது. இரவு முழுவதும் டயாலிசிஸ் செய்த பின்னரும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் பிரியா கடந்த 15ம் தேதி உயிரிழந்தார். இது தொடர்பாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் சோமசுந்தர் மற்றும் பால்ராம் சங்கர் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.