ரோட்டில் குப்பை கொட்டுவதை தடுக்க மாற்றி யோசித்த தூய்மை பணியாளர்கள்…

திருச்சி உறையூர் பாளையம் பஜார் பகுதியில் உள்ள ஒரு ட்ரான்ஸ்பார்மர் அருகில் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக குப்பை கொட்டி வந்தனர் அங்கு குப்பையை கொட்டாமல், வீடு தேடி வரும் தங்களிடம் குப்பையை தரம் பிரித்து தருமாறு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டும், பொது இடத்தில் குப்பை கொட்டுவது தொடர்ந்து வந்தது.
இதனால், பொது இடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க ஒரு புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த தூய்மைப் பணியாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி, அங்கு குவிந்திருந்த குப்பையை முற்றிலுமாக அகற்றி, அங்கு புதிதாக சிமென்ட் தளம் அமைத்து, கண்ணைக் கவரும் விதமாக பல வண்ணங்கள் பூசி, குரோட்டன்ஸ், பூச்செடிகள் வைத்துள்ளனர். திருச்சி பாளையம் பஜார் பகுதியில் குப்பையாக கிடந்த இடம். மேலும், அங்கு டிரான்ஸ்பார்மரை சுற்றி வலை அடித்து, அதன் முன் தினமும் கோலம் போட்டு வருகின்றனர். அத்துடன் அங்கு பொது இடத்தில் குப்பை கொட்டாமல் சுத்தமாக வைத்திருக்கக் கோரி வேண்டுகோள் பலகையும் வைத்துள்ளனர். அவர்களின் இந்த முயற்சிக்கு இப்பகுதி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனால், அந்த இடத்தில் தற்போது யாரும் குப்பை கொட்டாமல் சுத்தமாக உள்ளது. இதுகுறித்து அந்த வார்டு கவுன்சிலர் க.சுரேஷ் கூறும்போது ‘இதேபோல எனது வார்டில் பொது இடங்களில் குப்பைக் கொட்டுமிடங்களை கண்டறிந்து அங்கே சுத்தம் செய்து அலங்கார செடிகள் வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளேன் என்றார்.