கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் ,நேதாஜி வீதியைச் சேர்ந்தவர் பார்வதி ( வயது 56) இவரது மகன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இவர் தனது மகனை பார்க்க மருத்துவமனைக்கு சென்றார். அப்போது பார்வதியை சந்தித்த 2 பெண்கள் எங்களின் உறவினர் விபத்தில் சிக்கி சிங்கநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ சிகிச்சைக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. எங்களிடம் 28 தங்க நாணயங்கள் உள்ளன .அதனை ஈடாக வைத்துக் கொண்டு உங்களின் நகையை தாருங்கள் என்று கேட்டனர். எனவே பார்வதி தான் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் செயினை கழட்டி கொடுத்தார். அவர்களும் தங்க நாணயங்களை கொடுத்து விட்டு சென்றனர் தொடர்ந்து பார்வதி நகைக்கடைக்கு சென்று அந்த நாணயங்களை சோதித்துப் பார்த்தார். இதில் அவை தங்கம் முலாம் பூசிய போலி நாணயம் என்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த பார்வதி இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் பார்வதியுடன் மோசடியில் ஈடுபட்டது 35 வயது மதிக்கத்தக்க சென்னையை சேர்ந்த ராணி , சுதா என்பது தெரியவந்தது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ராணி, சுதா ஆகியோர் மேலும் பல பெண்களிடம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 2 பெண்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவைஅரசு மருத்துவமனையில் பெண்ணிடம் போலி தங்க நாணயங்கள் கொடுத்து நூதன மோசடி. 2 பெண்களுக்கு போலீஸ் வலைவீச்சு.
