கோவை பாப்பநாயக்கன்பாளையம், லட்சுமி மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் விமல். இவரது மனைவி சங்கீதா ( வயது 33) இவரது செல்போனுக்கு கடந்த 30ஆம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் மும்பையில் பணியாற்றும் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி என்றும், உங்கள் வீட்டுக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் பார்சலில் வந்துள்ளது என்றும் அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார் . இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கீதா அது போன்று எனது வீட்டிற்கு எந்த பார்சலும் வரவில்லை என்று கூறினார். தொடர்ந்து பேசிய அந்த நபர் கூரியர் நிறுவனத்தில் இருந்து உங்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது .அந்த பார்சல் சமூக விரோதிகளிடம் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் நீங்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் உங்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டிய நிலை வரும் . அப்படி வழக்கு பதிவு செய்யாமல் இருக்க எங்களுக்கு . 98 ஆயிரத்து 126 ரூபாய் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் வங்கி கணக்கு விவரத்தையும் வழங்கி உள்ளார். பின்னர் சில நிமிடங்கள் கழித்து சங்கீதாவுக்கு வாட்ஸ் அப் செயலியில் ஒரு வீடியோ அழைப்பு ஒன்று வந்தது. அதில் அதே நபர் தோன்றி பேசினார். அவர் அருகில் போலீஸ் சீருடை அணிந்த ஒருவர் பணம் அனுப்பவில்லை என்றால் உன்னை கைது செய்ய நேரிடும் என்று மிரட்டினார். இதனால் பயந்து போன சங்கீதா தன்னிடமிருந்து 98, ஆயிரத்து 126 ரூபாயை அந்த நபர் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தார். இருந்தாலும் சந்தேகம் அடைந்த சங்கீதா தன்னிடம் பணம் வாங்கிய நபர் குறித்து விசாரித்தார். அப்போது அந்த நபர் அவரிடம் பேசி பணத்தை மோசடி செய்து தெரிய வந்தது. இது குறித்து சங்கீதா கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஆசாமிகளை தேடி வருகிறார்கள்..