நானும் ஒரு விவசாயி, விவசாயியின் கஷ்டம் எனக்கு தெரியும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேனி பங்களாமேடு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது, நோட்டா உடன் போட்டி போடும் கட்சி பாஜக என ஊடகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியதை ஒளிபரப்பி, தேவைக்காக கூட்டணி அமைப்பவர்கள் பச்சோந்திகள் என்று இபிஎஸ் சாடியுள்ளார்.
14 ஆண்டு காலம் காணாமல் போன டிடிவி தினகரன், இன்றைக்கு தேர்தல் என்றதும் உங்கள் முன்பு வந்து நிற்கிறார். தன் சுயநலம் மற்றும் அதிகாரத்திற்காக கட்சி மாறிச் சென்றவர்களுக்கு தேர்தலில் தண்டனை வழங்கப்படும்.
கட்சியில் மூத்த தலைவர்களே இல்லையா என ஊடகத்தினர் கேட்கின்றனர். ஏன் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள், ஒன்றியச் செயலாளர்கள் எல்லாம் கட்சியின் வளர்ச்சிக்கு உழைக்கவில்லையா? அவர்களுக்கு சீட் கொடுப்பதில் என்ன தவறு?
கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானத்தில் ஏறி வைகுண்டம் போன கதையாக, இந்தியாவை பாதுகாக்க ஸ்டாலின் அழைக்கிறார் என விளம்பரம் செய்கிறது திமுக. முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த திமுக அரசு என்ன செய்தது?
இன்று விலைவாசி ஏறிவிட்டது. மதுரையில் விசாரித்த போது, அத்தியாவசிய பொருட்களின் விலை 40% உயர்ந்துவிட்டதாக சொன்னார்கள். அரிசி விலை கிலோ ரூ.15 வரை உயர்ந்துவிட்டது. நானும் ஒரு விவசாயி, விவசாயியின் கஷ்டம் எனக்கு தெரியும். விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தந்தது அதிமுக அரசு.
மோடிக்கு நான் பயப்படுகிறேனா? உங்களை போல நான் கோழை அல்ல ஸ்டாலின் அவர்களே. உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசி வருகிறார் ஸ்டாலின். மத்தியில் பாஜக மட்டுமல்ல, எந்த அரசு வந்தாலும் மக்கள் விருப்பத்திற்கு எதிரான திட்டங்களை நாங்கள் எதிர்ப்போம்.
அதிமுகவை அபகரிக்க முயன்றவர்களை, தொண்டர்கள் துணையுடன் வீழ்த்திக் காட்டினோம். இன்று அதிமுக தொண்டர்களின் ஆதரவோடு, பலம் மிக்க பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. அதிமுக 2024 மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்லும். இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.