ஜெயலலிதா யாருடன் இணைந்து செயல்பட்டார் என்பதை அறிந்த உயிருள்ள சாட்சி நான்… என்னால் ஓப்பனா பேச முடியாது… சஸ்பென்ஸ் வைத்த மைத்ரேயன்.!

டெல்லி : “ஜெயலலிதா பாஜகவை கடுமையாக எதிர்த்தார் என்பது தவறான வாதம், தேசிய அரசியலில் அவர் யார் யாருடன் இணைந்து செயல்பட்டார் என்பதையெல்லாம் அறிந்த உயிருள்ள சாட்சி நான்.” என சஸ்பென்ஸ் வைத்துள்ளார் இன்று பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன்.

மைத்ரேயன் ஆரம்ப நாட்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். 1991ஆம் ஆண்டு பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினரானார். 1995 முதல் 1997 வரை பாஜக யின் தமிழ்நாடு பொதுச் செயலாளராகவும், 1997 முதல் 1999 வரை துணைத் தலைவராகவும், 1999ல் சில காலம் மாநில தலைவராகவும் பணியாற்றினார். அதே ஆண்டில் பாஜகவிலிருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

2002ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மைத்ரேயன் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 2007, 2013 காலகட்டத்திலும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். ஜெயலலிதா இருக்கும்போது கட்சியில் பல முக்கிய பொறுப்புகளை மைத்ரேயனுக்கு அளித்திருந்தார்.

மைத்ரேயன் அதிமுகவில் இணைந்தபிறகு நடைபெற்ற அத்தனை பொதுத் தேர்தல்களிலும் அதிமுகவில் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் மைத்ரேயனை இடம்பெறச் செய்திருந்தார் ஜெயலலிதா. டெல்லியில் தனக்கான நம்பிக்கையான நபராக மைத்ரேயனை வைத்திருந்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டாக உடைந்தது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவரது அணியில் இருந்து வந்தார் மைத்ரேயன். பின்னர் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுடன் கைகோர்த்தபோதும், 2019ல் மைத்ரேயனுக்கு மீண்டும் ராஜ்யசபா வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் ஏற்பட்ட அரசியல் மோதலுக்கு மத்தியில் மைத்ரேயன், எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றார். அங்கு அவருக்கு முக்கியத்துவம் வழங்கப்படாத நிலையில், அதிருப்தி அடைந்து ஓபிஎஸ்ஸை சந்தித்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எடப்பாடி பழனிசாமியால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு அதிமுகவில் இருந்து ஒதுங்கி இருந்து வந்தார்.

இந்நிலையில், 23 ஆண்டுகளாக அதிமுகவில் பயணித்துவந்த மைத்ரேயன், இன்று டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங், தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி உள்ளிட்டோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன், “23 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளேன். பாஜக பல சாதனைகளைச் செய்திருக்கிறது. பாஜக பட்டாளத்தில் ஒருவனாக பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தவே நான் பாஜகவில் இணைந்திருக்கிறேன். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 2 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக பணிகளைச் செய்து வருகிறார். அவருடன் இணைந்து செயல்படுவேன்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிலபல நேரங்களில் ஒரு முடிவை எடுத்துள்ளார். தேசிய அரசியலில் கால்பதிப்பதற்காக ஜெயலலிதா என்ன நிலைப்பாடு கொண்டிருந்தார், யார் யாருடன் இணைந்து செயல்பட்டார், யார் யாரோடு பேச முயன்றார் என்பதையெல்லாம் அறிந்த உயிருள்ள சாட்சி நான். பல விஷயங்களை பேச முடியாது. ஜெயலலிதா பாஜகவை கடுமையாக எதிர்த்தார் என்பது தவறான வாதம்.” எனத் தெரிவித்துள்ளார்.