நான் எங்கும் ஓடி ஒளியவில்லை… இங்கு தான் இருக்கிறேன்… திருவனந்தபுரத்தில் மோகன்லால் பேட்டி..!

திருவனந்தபுரம் : ஒட்டுமொத்த மலையாள சினிமா உலகையே புரட்டி போட்டுள்ளது ஹேமா கமிஷன் அறிக்கை. நடிகைகள், பெண் திரை கலைஞர்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லை, எம்.எல்.ஏ, மூத்த நடிகர்கள், நடிகர் சங்க முக்கிய நிர்வாகிகள் என பலரது பெயர் அடிபடவே கேரள திரையுலகம் மட்டுமின்றி தென் இந்திய திரையுலகமே ஆட்டம் கண்டுவிட்டது.

ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து நடிகைகளிடம் வாக்குமூலம் பெற்று போலீசார், பல முக்கிய பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

இப்படியான சூழலில், கேரளா நடிகர் சங்கமான அம்மா (Association of Malayalam Movie Artistes – A.M.M.A) மொத்தமாக கலைக்கப்பட்டது. அதன் தலைவர் நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். நடிகைகளின் பாலியல் புகார்கள் எழுந்த சமயத்தில் நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இதன் தலைவர் மோகன்லால், ஹேமா கமிட்டி பாலியல் புகார் குறித்து எதுவும் பேசாமல் இருந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இப்படியான சூழலில் இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் மோகன்லால். அப்போது, தனது தரப்பு விளக்கங்களை மட்டும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், இங்கு தான் இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், தனது மனைவிக்கு ஆபரேஷன் நிகழ்ந்ததாலும், தான் நடித்த படங்களின் புரொமோஷன் வேளைகளில் ஈடுபட்டு வந்ததாலும் செய்தியாளர்களை சந்திக்க முடியவில்லை என விளக்கம் அளித்தார். அதனை தொடர்ந்து பேசிய மோகன்லால், “எல்லாத்துறைகளிலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சினிமாத் துறையில் மட்டும் இப்படியான சம்பவங்கள் நிகழவில்லை.

ஹேமா கமிட்டி ரிப்போர்ட் குறித்து, நான் அந்த குழுவுடன் பேசினேன். எனக்கு தெரிந்த விஷயங்களை நான் அவர்களிடம் கூறினேன். கேரளா நடிகர் சங்கமான அம்மா என்பது ஒரு குடும்பம் போன்றது. இங்கு அனைவரது நலம் கருதி கடந்த 25, 30 வருடங்களாக செயல்பட்டு வருகிறோம்.இந்த சங்கம் மூலம் நம்முடன் உள்ள சக நடிகர்களுக்கு உதவி புரிய வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் சங்கம் உருவாக்கப்பட்டது.

நடிகர்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கவும், மற்ற நலத்திட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தொடங்கப்பட்ட இயக்கம். நான் ஆரம்பம் முதலே இந்தச் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். இதில், 2 முறை தலைவராக இருந்துள்ளேன்.

நான் எங்கு ஓடி ஒளிந்தேன்? இங்கு தான் உள்ளேன். ஹேமா கமிட்டி அறிக்கையில் மலையாள சினிமா மொத்தமாக குற்றம் செய்தது என்று கூறவில்லை. அதேபோல மலையாள சினிமாவில் நடிகர் சங்கமான அம்மா மட்டுமல்ல. சினிமாவில் பல்வேறு துறைகள் உள்ளன. அம்மா அமைப்பு பற்றி மட்டுமே அவதூறு பரப்ப வேண்டாம்.

நாங்கள் ஆலோசித்து தான் அம்மா நடிகர் சங்கத்தில் இருந்து விலகினோம். அதனால், மற்ற நடிகர்களுக்கு ஓய்வூதியம், இன்சூரன்ஸ், வீடுகள் தங்குமிடம் ஆகிய சேவைகள் தொடர்ந்து செய்லபடும்.

அரசு அதன் வேலையை செய்கிறது. அரசு அமைத்த குழு இருக்கிறது. அது குறித்து நடவடிக்கை எடுக்க காவல்துறை இருக்கிறது. காவல்துறை விசாரணை செய்து வருகிறது. நீதிமன்றங்கள் உரிய நீதியை வழங்கும். அதனால் பாலியல் புகார்கள் குறித்து இப்போது எதுவும் பேச முடியாது.

தற்போது நான் வலியுறுத்த வேண்டியது என்னவென்றால், மலையாள சினிமா பாதிக்கப்படக்கூடாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன். எல்லாவற்றுக்கும் நடிகர் சங்கத்தை குறை கூறுவது சரியல்ல. அரசு அதன் வேலைகளை செய்கிறது. ஹேமா கமிட்டி அறிக்கையை நான் வரவேற்கிறேன்.

எங்கள் சினிமா சங்கத்தின் சார்பாக ஒரு நட்சத்திர நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க நாங்கள் தீர்மானித்தோம். அதுபோல், கார்கில் போர் சமயத்தில் நாங்கள் செய்துள்ளோம். மற்ற பேரிடர் பாதிப்புகளுக்கும் இவ்வாறு செய்துள்ளோம். அதுபோல பல்வேறு நலத்திட்டங்கள் செய்துள்ளோம். தற்போது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சைகளுக்கு ஒட்டுமொத்த கேரளா திரையுலகமும் பதில் சொல்லும்.” என்று நடிகர் மோகன்லால் விளக்கம் அளித்தார்.