சென்னை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடர்பான ஆடியோ சர்ச்சைகள் அனைத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ என்று ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது. திமுகவினர் மீதே குற்றச்சாட்டு வைக்கும் விதமாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.
இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை அறியப்படவில்லை. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இன்னொரு ஆடியோவும் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த இரண்டு ஆடியோக்களின் உண்மைத்தன்மை தெரியவில்லை. அமைச்சர் பிடிஆர் இந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது, பொய்யானது என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று வெளியான ஆடியோ குறித்து பிடிஆர் விளக்கி உள்ளார். ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பொய்யான வீடியோக்களை வெளியிட்டு பிடிஆர் அளித்துள்ள விளக்கத்தில், இது தன்னுடைய குரல் இல்லை என்று அவர் விளக்கம் அளித்து உள்ளார்.
இந்த ஆடியோக்களை தொடர்ந்து பின்வரும் சர்ச்சைகள் எழுந்தன.
பிடிஆர் மீது முதல்வர் ஸ்டாலின் கோபமாக இருக்கிறார் என்று கூறப்பட்டது.
பிடிஆரை பதவி விலகும் படி முதல்வர் ஸ்டாலின் கூறிவிட்டதாக செய்திகள் வந்தன.
பிடிஆர் ராஜினாமா செய்ய போகிறார் என்றும் கூட சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.
ஆனால் இந்த சர்ச்சைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று முற்றுப்புள்ளி வைத்தார். இன்று உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்கையில், பிடிஆர் ஆடியோ குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், இந்த ஆடியோ குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே இரண்டு முறை விளக்கம் அளித்துவிட்டார். இந்த மட்டமான ஆடியோ அரசியல் பற்றி நான் பேச விரும்பவில்லை.
மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. மட்டமான அரசியல் செய்யும் நபர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை, என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
மொத்தமாக பிடிஆர் குறித்த சர்ச்சைகள், ஆடியோக்கள் அனைத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் இந்த வீடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.
இதில் பிடிஆரின் இரண்டாவது ஆடியோவை அண்ணாமலை வெளியிட்டு இருந்த நிலையில், இந்த மட்டமான ஆடியோ அரசியல் பற்றி நான் பேச விரும்பவில்லை. மட்டமான அரசியல் செய்யும் நபர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை, என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
முதல்வர் ஸ்டாலினை நேற்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். 1 மணி நேரம் இவர்கள் ஆலோசனை செய்துள்ளனர். ஸ்டாலினை சந்தித்த பி.டி.ஆர். தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தயாராக எடுத்துச் சென்ற கடிதத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதாவது, ஸ்டாலினாக, ராஜினாமா செய்யுங்கள் என சொல்வதற்கு முன்பு, நாமே ராஜினாமா செய்திடலாம் என்ற முடிவை எடுத்து ராஜினாமா கடிதத்தை எடுத்துச் சென்றுள்ளார் பி.டி.ஆர். அதனை ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை.
கடிதத்தை படித்து பார்த்துவிட்டு, அதனை மீண்டும் பி.டி.ஆரிடமே கொடுத்து விட்டார் ஸ்டாலின். பிடிஆரின் ராஜினாமாவை முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது,
அந்த ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், இதற்கு பின் யார் இருக்கிறார்கள் என்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர் பிடிஆர் நேற்று பேசி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.