அதிமுகவில் இணையும் எண்ணமே கிடையாது – டிடிவி தினகரன்..!

ஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறியதாவது:-

மேட்டூர் அணையில் நீர் மட்டம் குறைவாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள திமுக அரசின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி தான் கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. கர்நாடக காங்கிரஸ் முதல்வர், துணை முதல்வரிடம், சோனியா காந்தி, ராகுல் காந்தி மூலம் தமிழகத்தின் நியாயங்களை எடுத்துக் கூறி, அணை கட்டக் கூடாது, நடுவர் மன்றத் தீர்ப்பின்படி மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரை வழங்க வேண்டும் என தமிழக அரசு அழுத்தம் கொடுத்து நீரைப் பெற்றுத்தர வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதற்காகக் கூட்டணி அமைத்து விட்டு, விவசாயிகளை மறந்து விடாமல் தமிழக அரசு நமக்கான நீரினை பெற்றுத் தர வேண்டும்.

ஒரு சில சுயநலவாதிகள், பதவி வெறியர்கள், பணத் திமிரால் தங்களை முன்னிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதிமுகவை அழித்துக் கொண்டு வருகிறார்கள். இரட்டை இலை சின்னமும், ஜெயலலிதாவின் கட்சியும், பழனிசாமியிடம் இருக்கிறது என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டிருக்கின்ற அதிமுக தொண்டர்கள், அந்தக் கட்சி பலவீனமடைந்து வருவதை உணர வேண்டும்.

அதிமுகவை மீண்டும் பலப்படுத்த யாரை முன்னுறுத்த வேண்டும் என்பதை அங்குள்ள ஜெயலலிதாவின் தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதனால் தான் நாங்கள் அம்மா முன்னேற்ற கழகத்தைத் தொடங்கினோம். ஆனால், அதிமுகவில் இணையும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது. தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பாக பழனிசாமி பொய்யான புள்ளி விவரங்களை கூறி வருகிறார். பண பலம், இரட்டை இலை இருந்தும் அவர்களால் சோபிக்க முடியவில்லை. அதனால் அதிமுகவுக்கு 13 சதவீதத்திற்கு மேல் வாக்கு வங்கி சரிந்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் பழனிசாமி திமுகவுக்கு ‘பி’ டீமாக இருந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பதற்காக வேட்பாளரை நிறுத்தினார். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி 18 சதவீதம் வாக்கு பெற்றுள்ளோம். வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் உறுதியாக ஆட்சி அமைக்கும். திமுக மிகவும் மோசமாக படு தோல்வி அடையும்.

நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியே எங்களுக்கு பலம். ஓட்டுக்கு பணம் கொடுக்காதது தான் எங்களுக்குப் பலவீனமாகும். விக்கிரவாண்டித் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஒற்றுமையான முடிவெடுத்து வேட்பாளரை நிறுத்தி வெற்றிப் பெறச் செய்வோம். 2019 மக்களவைத் தேர்தலின் போது பாஜக மீதிருந்த வெறுப்புணர்வு மக்களிடம் இப்போது இல்லை என்பதை நடைபெற்ற தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பொது சிவில் சட்டம் கொண்டு வருவது தவறில்லை என்பதால் நாங்கள் அதற்கு ஆதரவாக இருப்போம். பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம். நாட்டுக்கு, மக்களுக்கு நல்லது நடந்தால் ஆதரிப்போம்; இல்லை என்றால் எதிர்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.