சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியொருவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான சம்பவம் நேற்று முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதில், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மறுபக்கம், இந்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருக்கிறது எனக் கடுமையாகச் சாடிவருகின்றன.
இத்தகைய சூழலில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி விவரங்கள் இடம்பெற்ற காவல்துறை எஃப்.ஐ.ஆர் இணையத்தில் கசிந்தது இந்தப் பிரச்னையை மேலும் தீவிரமாக்கியது. பின்னர், இணையத்தில் அதை முடக்கிய காவல்துறை, எஃப்.ஐ.ஆர் தகவல்களை யாரேனும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. இந்த நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, எஃப்.ஐ.ஆர் விவரங்கள் கசிந்த விவகாரத்தில் தி.மு.க அரசைக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.
கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, “தி.மு.க என்ற போர்வையில் இந்தக் குற்றவாளி அந்தப் பெண்ணைச் சீண்டியிருக்கிறார். தி.மு.க-வின் கட்சிப்பொறுப்பில் இருக்கிறார், அமைச்சர்களுடன் இருக்கிறார் என்ற ஒரே காரணத்தால் போலீஸார் விசாரணையே செய்யவில்லை. இப்போது, எஃப்.ஐ.ஆர் எப்படி வெளியானது. அந்தப் பெண் குற்றம் செய்ததுபோல எஃப்.ஐ.ஆர் எழுதப்பட்டிருக்கிறது. படிக்கும்போது ரத்தம் கொதிக்கிறது.
தி.மு.க-வினர் வெட்கப்படவேண்டும். நாளை காலை 10 மணிக்கு ஒவ்வொரு பா.ஜ.க தொண்டருக்கும் தங்களது வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபடுவர். அதோடு, நாளை காலை என் வீட்டின் முன்பு சாட்டையால் ஆறு முறை என்னை நானே அடித்துக்கொள்ளப் போகிறேன். தி.மு.க என்ற கட்சி தமிழகத்திலிருந்து அகற்றப்படும் வரை நான் காலணி அணியமாட்டேன். 48 நாள்கள் விரதமிருக்கப் போகிறேன். முருகப்பெருமானிடம் முறையிடப் போகிறேன்.” என்று கூறி முடித்து காலணிகளைக் கழற்றி சபதமெடுத்தார்.