காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் ரோகினி, ரூபா- 7 மாதத்துக்கு பின் புதிய பொறுப்பு.!!

பெங்களூர்: கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரியின் அந்தரங்க போட்டோக்களை ஐபிஎஸ் அதிகாரி ரூபா தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து இருவரையும் காத்திருப்பு பட்டியலுக்கு கர்நாடகா அரசு மாற்றிய நிலையில் தற்போது 7 மாதங்களுக்கு பிறகு புதிய பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரூபா. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் பரபரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது அவரிடம் ரூ.1 கோடி வாங்கி கொண்டு அவருக்கு சிறை அதிகாரிகள் சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாக புகார் தெரிவித்து பிரபலமானார்.

அதேபோல் கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரோகினி சிந்தூரி. இவரும் அங்கு பிரபலமான அதிகாரியாக அறியப்படுகிறார். இந்நிலையில் தான் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென்று ரோகினி சிந்தூரி மீது டி ரூபா அடுக்கடுக்கான பல புகார்களை முன்வைத்தார்.

மேலும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ரோகினி சிந்தூரியின் 7 தனிப்பட்ட (அந்தரங்கம்) படங்களை பதிவிட்டதோடு, அந்த படங்களை அவர் 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார் என குற்றம்சாட்டினார். அதோடு அவர் மைசூரில் பணியாற்றியபோது முன்னாள் அமைச்சரான சாரா மகேசை உணவகத்தில் சந்தித்தது தொடர்பான போட்டோவையும் வெளியிட்டு விமர்சனம் செய்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டை ரோகினி சிந்தூரி முழுமையாக மறுத்தார். அதோடு டி ரூபாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என கூறினார். ஆனால் டி ரூபா மன்னிப்பு கோரவில்லை. இதையடுத்து இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் நடந்தது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே ரோகினி சிந்தூரி மற்றும் டி ரூபா ஆகியோரை முந்தைய பாஜக அரசு காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றியது. இதையடுத்து இருவரும் தலைமை செயலாளரிடம் தங்கள் தரப்பு நியாயத்தை தெரிவித்தனர். அதோடு டி ரூபாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் ரோகினி சிந்தூரி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தான் 7 மாதங்களுக்கு பிறகு ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி மற்றும் ஐபிஎஸ் அதிகாரி டி ரூபா ஆகியோருக்கு கர்நாடகா அரசு பதவி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி கர்நாடக அரசிதழ் துறையின் தலைமை ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஐபிஎஸ் அதிகாரி டி ரூபாவுக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.