கோவையில் 2-ம் நிலைகாவலருக்கான எழுத்து தேர்வு. 2,373 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தின் சார்பில் தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகளில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான 3,359 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் நடந்தது .கோவை மாவட்டத்தில் 5 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுகாலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12- 40 மணி வரை நடந்தது. இந்த தேர்வை எழுத கோவை, நீலகிரி, திருப்பூர், மாவட்டங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 458 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 7 ஆயிரத்து 85 பேர் தேர்வு எழுதினர் ..2,373 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேலும் பெண்களுக்கு என்று தனியாக அமைக்கப்பட்டிருந்த மையத்தில் 1,282 பேர் தேர்வு எழுதினர். இதில் இளம்பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு எழுத வந்திருந்தனர். முன்னதாக தேர்வு எழுத வந்தவர்கள் அனைவரும் தேர்வு மையத்தின் நுழைவாசலில் வரிசையாக நின்று பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் தேர்வு குழு சிறப்பு கண்காணிப்பு அதிகாரியும் கோவை மாநகர போலீஸ் கமிஷனருமான பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். அங்கு தேர்வு எழுத வருபவர்களுக்கு குடிநீர், கழிவறை’ மின்சார உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? என்று பார்வையிட்டார். அப்போது தேர்வுக்குழு தலைவர் துணை போலீஸ் கமிஷனருமான ராஜ ராஜன் , தேர்வு உறுப்பினர் ,துணை போலீஸ் சூப்பிரண்டு ஜனனி பிரியா ஆகியோர் உடன் இருந்தனர். தேர்வுமையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.