போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் அபராதம் செலுத்தாவிட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து-கோவை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை..!

கோவை ஜனவரி 29 சாலை பாதுகாப்பு மாதத்தை யொட்டிகோவை மாநகர காவல் துறை மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் கோவை லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் நேற்று 100 பேருக்கு இலவச ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதற்கு துணை கமிஷனர் அசோக் குமார், கூடுதல் துணை கமிஷனர் சிற்றரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கலந்து கொண்டு வாகன ஓட்டிகள் மற்றும் அவர்களின் பின்னால் அமர்ந்து வந்த மாணவர்கள் உட்பட 100 பேருக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் மட்டுமல்லாமல் பின்னால் இருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். வாகனத்தை இயக்க சாவி போட்டதும், ஹெல்மெட்டை போட கை தானாக செல்ல வேண்டும். அதுபோல காரை இயக்க சாவியை போட்டதும் சீட் பெல்ட் அணிய வேண்டும். இது போன்ற விதிகள் பின்பற்றினால் விபத்து நடப்பதை குறைக்கலாம். கோவை மாநகர பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் செல்பவர்கள், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கண்டறிந்து தானாகவே அபராதம் விதிக்கும் வகையில் 10 அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன .தற்போது கூடுதலாக 10 கேமராக்கள் இணைக்கும்பணி நடந்து வருகிறது. போக்குவரத்து விதிகளை மீறினால் கேமராக்கள் படம் பிடித்ததும் வாகன ஓட்டுகளின் செல்போன் எண்ணுக்கு தானாக அபராதம் குறித்த தகவல் வரும். இதுபோன்ற கேமராக்கள் அதிகமாகும் போது விபத்துக்கள் குறையும் கடந்த ஆண்டு இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 2 லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதிவேகமாகவும், செல்போன் பேசியபடியும் வாகன ஓட்டுவது, கார்களில் சீட் பெல்ட் போடாமல் செல்வது, சிக்னலில் நிற்காமல் செல்வது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளைமீறியது தொடர்பாக 4 லட்சத்து 14 ஆயிரம் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதில் பலர் அபராத தொகையை செலுத்தாமல் உள்ளனர் .அவர்கள் யார்? என்பது குறித்து கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது நீண்ட நாட்களாக அபராத தொகையை செலுத்தாமல் இருப்பது குற்றமாகும். தொடர்ந்து அபராதம் செலுத்தாதவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளோம். எனவே அபராத தொகையை செலுத்தாமல் இருப்பவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.இவர் அவர்கூறினார்