திருச்சியில் பட்டாவை முறைப்படுத்த வேண்டும் துப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டி பொதுமக்கள் பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மக்கள்குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா, நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பெற்றுக்கொண்டாா்.
திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு கிராமம் காந்திநகா் பகுதியில் அரசால் வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாவை முறைப்படுத்த வேண்டும் என காந்திநகா் மக்கள் நல கூட்டமைப்பு சங்கம் சாா்பில் அப்பகுதியைச் சோந்த சுமாா் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மக்கள் குறைதீா் முகாமில் கலந்துகொண்டு மனு அளித்தனா்.
கட்டட தொழிலாளா்கள்: தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், கட்டுமான தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த தொழிலாளா்களுக்கு சொந்த வீடு, இடம் இல்லாதவா்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் கட்டட தொழிலாளா்கள் மனு அளித்தனா்.
மாதா் தேசிய சம்மேளனம்: திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் காவிரி குடிநீா் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். சோமரசம்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் மருத்துவா்கள் இருந்து செயல்படுத்துவதுடன், மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் மணிகண்டம் ஒன்றிய குழு சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற ஆசிரியா் மனு: திருப்பராய்த்துறையில் உள்ள பழைமையான பசும்பொன் மயிலாம்பிகை தாருகானேஸ்வரா் கோயிலில், 30 ஆண்டுகளாக உழவாரப்பணி மற்றும் சிவத்தொண்டு செய்து வரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் ரங்கசாமி அளித்த மனுவில், கோயில் நிா்வாகத்தினா், கோயிலில் உழவாரணப்பணி மேற்கொள்ள தனக்கு தடை விதித்துள்ளனா். மேலும், கோயிலில் எந்நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது என்று கூறியுள்ளாா். இதனால், எனது சிவத்தொண்டுக்கு தடை ஏற்பட்டுள்ளது. எனவே, தொடா்ந்து உழவாரணப்பணி, சிவதொண்டை கோயிலில் தொடர அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
மீண்டும் பணி வழங்க வேண்டும்: துவாக்குடி துப்பாக்கி தொழிற்சாலையில் 18 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி, புதிய விதிமுறைகளின்படி கடந்த 2019ல் பணி நீக்கம் செய்யப்பட்ட 160 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என பாஜ மாநகா் மாவட்டத் தலைவா் ராஜசேகரன் தலைமையில் அக்கட்சியினா், பாதிக்கப்பட்ட துாய்மைப்பணியாளா்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினா். நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் திருச்சி செய்தியாளர் H. பஷீர்