பரபரப்பான அரசியல் சூழலில்… அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை.. மசோதாக்களை விரைவுபடுத்த பிரதமர் மோடி அறிவுரை..!

டெல்லி: அமைச்சரவை மறுசீரமைப்பு விரைவில் நடைபெறலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, விஷன் 2047க்கான பணிகள் பற்றிப் பேசியுள்ளார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதையொட்டி, மத்தியில் ஆளும் பாஜக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கட்சியின் அமைப்புகளை வலுப்படுத்த கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மூத்த மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் தவிர தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இஸ்ரோ தலைவர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

2047 தொலைநோக்குத் திட்டம், உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பாகவும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், அதில் கடைப்பிடிக்க வேண்டிய அரசின் நிலைப்பாடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை, டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கான பொது நிதியுதவி, சாலைகள், ரயில்கள், துறைமுகங்கள் போன்ற 16 முக்கிய பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து பிரதமர் மோடி இந்தக் கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 20ஆம் தொடங்கவிருக்கும் நிலையில், அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த மசோதாக்களை விரைந்து முடிக்குமாறு பிரதமர் அழைப்பு விடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒரு பலன் நிறைந்த அமைச்சர்கள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பன்முக கொள்கை தொடர்பான விவகாரங்களில் பார்வைகளைப் பரிமாறிக் கொண்டோம் எனப் பதிவிட்டுள்ளார்.