கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 52). இவர் ராஜா வீதியில் சிறுதானிய கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று மனோகரன் மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் சென்றார். அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி காத்திருந்தார்.
அப்போது பின்னால், வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் வழி விடுமாறு தொடர்ந்து ஹார்ன் அடித்தார். இதனை மனோகரன் கண்டித்தார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் மனோகரனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். மேலும் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றார். இதுகுறித்து மனோகரன் கடைவீதி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மனோகரனை தாக்கியது கோவை செல்வபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தினேஷ் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.