கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கொண்டையம் பாளையத்தை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் (வயது 52).
இவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் தனது மகளுக்கு அரசு துறையில் வேலை வாங்குவதற்காக முயற்சி செய்து வந்தேன். அப்போது எனக்கு சரவணகுமார், ஜகவர் பிரசாத், மற்றொரு சரவணகுமார், அன்பு பிரசாத் ஆகியோர் அறிமுகமானார்கள். அவர்கள் சந்தான கிருஷ்ணனிடம் இந்து சமய அறநிலையத்துறை, உள்ளாட்சி நிர்வாகம், போக்குவரத்து உட்பட பல்வேறு அரசு துறையில் இளநிலை உதவியாளர், உதவியாளர் உட்பட பல்வேறு பணியிடங்கள் காலியாக இருக்கிறது.
பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருகிறோம் எனக் கூறினர். கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை பல்வேறு தவணைகளில் ரூ.21 லட்சம் பணத்தை நான் அவர்களிடம் கொடுத்தேன். ஆனால் இவர்கள் சொன்னபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை.
பலமுறை வேலை விஷயமாக கேட்டும் அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு . போலீசார் சம்பந்தப்பட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் 4 பேரும் கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல பேரிடம் பல லட்சம் ரூபாய் வாங்கி கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இவர்கள் 100க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூ.10 கோடி அதிகமாக பணத்தை வாங்கி ஏமாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. போலீசார் தேடுவதை அறிந்து 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.