கோவையில் எந்தெந்த குளங்களில் வண்டல் மண் எடுக்கலாம் – விவரங்கள் அளிக்க மாவட்ட வருவாய் அலுவலா் அறிவுறுத்தல்.!

கோவை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள பல்வேறு குளங்களை தூர்வாரவும், விவசாயத் தேவைகளுக்காக வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கவும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் எந்தெந்த குளங்களில் வண்டல் மண் எடுக்கலாம் என்ற விவரங்களை ஆட்சியரின் நோ்முக உதவியாளர் (வேளாண்மை) ஷபி அகமதுவிடம் வழங்க விவசாயிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் அறிவுறுத்தியுள்ளார்
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது: தமிழக அரசு சார்பில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்கும் வகையில் எந்தெந்த குளங்களில் எந்த அளவு வண்டல் மண் எடுக்க முடியும் என்ற விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க அறிவுறுத்தியுள்ளது. வண்டல் மண் எடுக்க வாய்ப்புள்ள குளங்களின் பட்டியல்களை ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் (வேளாண்மை) மார்ச் முதல் வாரத்துக்குள் விவசாயிகள் அளிக்க வேண்டும். விவசாயிகள் அளித்த குளங்கள் அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளிடம் ஆலோசனை செய்யப்பட்டு, குளங்களில் எவ்வளவு மண் எடுக்க முடியும் என்று ஆய்வு செய்து முழுமையான விவரங்கள் அரசுக்கு அளிக்கப்படும். அதன் அடிப்படையில் விவசாயத் தேவைகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதியளிக்கப்படும். மார்ச் முதல் வாரத்தில் குளங்களின் விவரங்களையும், இரண்டாவது வாரத்தில் வண்டல் மண் எடுக்க வேண்டிய அளவு குறித்தும், இறுதி வாரத்திற்குள் வண்டல் எடுப்பதற்கான விவசாயிகளின் விண்ணப்பங்களையும் அளிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே, விவசாயிகள் தாமதிக்காமல் குளங்களின் பட்டியல்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றாா்.