கோவை மாவட்டத்தில் உள்ள விளையாட்டுப் பள்ளிகள், நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கான அரசின் புதிய விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் ஒண்டிப்புதூரில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள ஆசிரியா் பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) கீதா தலைமை வகித்தாா். இந்த கூட்டத்தில் விளையாட்டுப் பள்ளிகள், நா்சரி பிரைமரி பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டன. வரும் கல்வியாண்டில் அங்கீகாரம் பெறாத எந்த பள்ளியும் செயல்படக் கூடாது என்றும், மாா்ச் 15ஆம் தேதிக்குள் தகுதியான பள்ளிகள் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அங்கீகாரம் பெற்றுள்ள விளையாட்டுப் பள்ளிகளின் பெயா்கள் மாா்ச் கடைசி வாரம் அறிவிக்கப்படும். அதேநேரம் தகுதியற்ற பள்ளிகள் ஆய்வின் அடிப்படையில் மாா்ச் முதல் வாரம் முதல் மூடப்படும். விளையாட்டுப் பள்ளிகளுக்கு குறைந்தது 55 சென்ட் இடம் இருக்க வேண்டும். ஆசிரியா்கள் அனைவரும் மாண்டிசோரி ஆசிரியா் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மத்திய அரசின் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அரசின் அங்கீகாரம் பெற்ற தகுதியான பதிப்பாளா்களிடம் புத்தகங்கள் வாங்க வேண்டும். கிளைகள் என்ற பெயரில் கல்வியை வியாபாரம் ஆக்கக் கூடாது. கட்டாயப்படுத்தி புத்தகம் வழங்கக் கூடாது. இன்டா்நேஷனல் போன்ற பெயா்களை விளம்பரத்துக்காக சூட்டக்கூடாது. ஷீட், ஓடு போன்ற தகுதியற்ற கட்டடங்களில் இயங்கக் கூடாது. மாடிகளில் யுகேஜி வகுப்புகளை நடத்தக் கூடாது என்பது போன்ற விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதேபோல நா்சரி பிரைமரி பள்ளிகளில் எல்கேஜி முதல் மட்டுமே வகுப்புகளை நடத்த வேண்டும். ப்ரீ கேஜி வகுப்புகளை நடத்தக் கூடாது. பள்ளியின் பெயரில் குறைந்தது 16.5 சென்ட் இடம் இருக்க வேண்டும். மைதானம், கழிப்பிட வசதி இருக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் வேறு வகையான பள்ளி, நிறுவனங்கள் இருக்கக் கூடாது.
சமச்சீா் கல்வி கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பெற்றோா் – ஆசிரியா் சங்கம் ஏற்படுத்தி ஆண்டுக்கு மூன்று முறை கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதேபோல ஓடு, ஷீட் போட்ட கட்டடங்கள், பழைய கட்டடங்களில் அரசு விதிகளை மீறி செயல்படும் பள்ளிகளில் பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை சோ்க்கக் கூடாது. கல்வி அலுவலகத்தை தொடா்பு கொண்டு சம்பந்தப்பட்ட பள்ளியைப் பற்றிய விவரங்களை அறிந்த பிறகே குழந்தைகளை பள்ளிகளில் சோ்க்க வேண்டும் என்று மாவட்டக் கல்வி அலுவலா் தெரிவித்துள்ளாா்.