கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் வரி ஏய்ப்பு செய்யப்படுகிறதா? என்பது குறித்து கோவை மண்டல ஜி.எஸ்.டி. உளவுத்துறை பொது இயக்குனரக அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருகிறார்கள். அதன்படி கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் அதிகாரிகள் குழுவினர் அதிரடி ஆய்வு நடத்தினர். இதில் போலியாக ஜி.எஸ்.டி. ரசிது தயாரித்து அரசுக்கு ரூ. 102 கோடி அளவுக்கு வரி செலுத்தாமல் ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது. மேலும் கோவையை சேர்ந்த ஒருவர் 4 நிறுவனங்களுக்கு போலி ஜி.எஸ்.டி .ரசீது தயாரித்துக் கொடுத்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து கோவையை சேர்ந்த அந்த நபரை ஜி.எஸ்.டி. உளவுத்துறை பொது இயக்குனரக அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து பிரிண்டர், 17 பேரின் பான்காடு, 20 பேரின் ஆதார் அட்டை, 21 வங்கி கணக்கு புத்தகம், 41 வங்கி கணக்கு காசோலை புத்தகம், 16 வெவ்வேறு நிறுவனங்களின் முத்திரைகள், செல்போன்கள் சிம்காடுகள் இ.வே. பில்கள் ,டெபிட் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதான நபரை அதிகாரிகள் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அந்த நபரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.