கோவை சுல்தான்பேட்டையை அடுத்த எஸ். அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 37). கூலி தொழிலாளி.
சம்வத்தன்று ராம்குமார் வீட்டில் இருந்தார். அப்போது அவரது அண்ணன் ஆனந்தகுமார் (46) குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அவர் திடீரென தாயாரிடம் தகராறில் ஈடுபட்டார். இதனை பார்த்த ராம்குமார், அங்கு சென்று அண்ணனிடம் தாயிடம் தகராறில் ஈடுபடாமல் அமைதியாக இருக்கும் படி கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தகுமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தம்பி ராம்குமாரை வெட்டினார். பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சத்தம் போட்டார்.
அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் ராம்குமார் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் இதுகுறித்து ராம்குமார் சுல்தான்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆனந்தகுமார் கைது செய்தனர்.