கோவை கணபதிமாநகரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 46). காண்டிராக்டர். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் சத்தியமங்கலம் சென்றார்.
இந்நிலையில், நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பார்த்தனர். அவர்கள் உடனே பழனிசாமியை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.
இதையடுத்து சத்தியமங்கலம் சென்ற அவர் வீடு திரும்பினார். அங்கு உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ.40 ஆயிரம் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
இதேபோன்று கோவை காந்திமாநகரை சேர்ந்தவர் மதன்குமார் (28), சூப்பர்மார்க்கெட் கணக்காளர். இவரது வீட்டு பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகைகளை காணவில்லை.
வீட்டிற்குள் புகுந்த யாரோ நகைகளை திருடி சென்று விட்டனர். இது குறித்து மதன்குமார் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 2 பேரும் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களது வீடுகளுக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சரவணம்பட்டியில் 2 வீடுகளில் திருட்டு நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.