கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ‘விபத்தில்லா கோவையை உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போக்குவரத்துப் பிரிவு துணை கமிஷனர் மதிவாணன் மேற்பார்வையில், போலீசார் நேற்று முன்தினம் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி, லட்சுமி மில் சந்திப்பு, நவ இந்தியா சந்திப்பு, அத்திப்பாளையம் பிரிவு சந்திப்பு, சரவணம்பட்டி சோதனைச் சாவடி, சரவணம்பட்டி – துடியலூர் சந்திப்பு, ரத்தினம் கல்லூரி அருகே, பொள்ளாச்சி ரோடு, எல்.ஐ.சி சந்திப்பு, நேரு கல்லூரி அருகே, கிருஷ்ணா கல்லூரி அருகே பாலக்காடு ரோடு, சாய்பாபா கோயில் அருகே, மேட்டுப்பாளையம் ரோடு ஆகிய 10 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த 1,155 பேர் சிக்கினர். இதில் 548 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 208 நபர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். 1,155 வாகன ஓட்டிகளுக்கும் அந்தந்த சிறப்பு வாகனத் தணிக்கை முகாமில், தன்னார்வ அமைப்புகள் மூலம் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும், ஹெல்மெட் அணிந்து சென்ற 399 இருசக்கர வாகன ஒட்டிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற சிறப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்படும்’ எனபோலீசார் தெரிவித்தனர்.