ஒடிசாவில் ரூ.1500 கோடி பட்ஜெட்… ஆனா தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ. 25 கோடி தானா.. விளையாட்டுத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்- உதயநிதி கோரிக்கை..!

சென்னை மதுரவாயலில் திமுக சார்பில் மறைந்த பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மதுரவாயல் எம்எல்ஏ கணபதி தலைமை தாங்கிய நிலையில், திமுக பொருளாளர் டி.ஆர் பாலு, அமைச்சர் மா. சுப்பிரமணியன், துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் உட்பட கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் பொதுக் கூட்டத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது, என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு முதல் உரை எழுதியது மதுரவாயில் தான். நான் பேசியது எல்லாம் டி.ஆர் பாலு ஞாபகம் வைத்துள்ளார். அவருடைய அனுபவம் மற்றும் நினைவாற்றல் குறிப்பிடத்தக்கது என்பதால் தான் அவர் பொருளாளராக இருக்கிறார். அதன் பிறகு சுயலாபத்திற்காக டெல்லியிடம் ஆட்சியை அடகு வைத்தவர்கள் இன்று கட்சியை வைத்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஆளுநருக்கு உண்மையில் நன்றி தான் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டின் மீது யாருக்கு உண்மையான அக்கறை இருக்கிறது என்பதை அவர் காண்பித்துள்ளார்.

பாஜக கட்சி எம்பி மற்றும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் வேலையை மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தமிழ்நாட்டில் நடக்காது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் திமுக கைப்பற்ற வேண்டும். மேலும் ஒடிசா மாநிலத்தில் விளையாட்டு துறைக்காக 1500 கோடி பட்ஜெட் ஒதுக்குகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் வெறும் 25 கோடி தான் பட்ஜெட் ஒதுக்கப்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் விளையாட்டு துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் டி.ஆர் பாலு கூற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.