கோவை பள்ளப்பாளையம் பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 31). டிரைவர். இவரது அண்ணன் பிரகாஷ் (34). சுமை தூக்கும் தொழிலாளி.
இந்த நிலையில் வினோத்குமாருக்கு ஒண்டிப்புதூர் பட்டணம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு பிரகாஷ் பலத்த காயங்களுடன் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனது அண்ணனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார்.
பின்னர் வினோத்குமார், பிரகாசிடம் என்ன நடந்தது என கேட்டார். அப்போது பிரகாஷ் தனக்கு தனது நண்பர் சந்தோஷ் என்பவர் செல்போனில் அழைத்தார். அவர் தன்னை பட்டணம் பகுதியில் யாரோ கடத்தி வைத்து உள்ளதாக தெரிவித்தார். எனக்கும் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. இதனால் எனக்கு மணி மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவருக்கு போன் செய்து விசாரித்தேன். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது மணி நெசவாளர் காலனி பகுதிக்கு என்னை வர கூறினார். நான் அங்கு சென்றேன். ஆனால் மணி அங்கு இல்லை. அருகில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றபோது மணி மற்றும் அவரது நண்பர்கள் நீலதேவன், நவின்குமார் மற்றும் சிலர் அங்கு நின்று இருந்தனர். அங்கு நான் சென்று எனது நண்பர் சந்தோஷ் குறித்து கேட்டேன். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி என்னை அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பி சென்றனர் என்றார்.
பின்னர் இதுகுறித்து அரவது தம்பி வினோத்குமார் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து பிரகாஷ் வெட்டிய மணி, நீலதேவன், நவின்குமார் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.