கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு முன்னாள் செயலாளரான வடக்கி பாளையத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் ரூ 30 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்ததாக புகார் செய்யப்பட்டது .இது தொடர்பாக கோவை மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் .அத்துடன் கையாடல் செய்த முன்னாள் செயலாளர் தங்கவேல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக காளிமுத்து, லட்சுமி, சரஸ்வதி, ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள 4-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது .வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் செயலாளர் தங்கவேலுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 24 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட் சரவணா பாபு தீர்ப்பு கூறினார். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காளிமுத்து. லட்சுமி ,சரஸ்வதி, ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பிரசன்னா வெங்கடேஷ் ஆஜரானார்..