கோவை சவுரிபாளையம் பால தண்டாயுதம் நகரில் பெருமாள் கோவிலில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டாள் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோவிலில் தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த பகுதி மக்கள் தினமும் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்வார்கள். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல கோவில் நடை திறக்கப்பட்டது. கோவில் பூசாரி சாமிக்கு பூஜைகளை செய்து வந்தார். ஆண்டாள் சிலைக்கும் பூஜை செய்யப்பட்டது. அப்போது ஒரு பச்சைக்கிளி வெளியே இருந்து பறந்து வந்தது. அந்த பச்சைக்கிளி கோவிலில் இருந்த ஆண்டாள் சிலை மீது பறந்து வந்து அமர்ந்தது.
இதனைக் கண்டு ஆச்சரியமடைந்த கோவிலில் இருந்த பக்தர்கள் சாமியை வணங்கினர். இந்த செய்தி காட்டுத்தீ போல அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனை கேட்ட ஊர் மக்கள் கோவிலுக்கு திரண்டனர். கோவில் பூசாரி அந்த கிளிக்கு பிரசாதம் வழங்கினார். அதனை அந்த பச்சைக்கிளி அழகாக சாப்பிட்டுக் கொண்டு அமர்ந்து இருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.