சண்டிகர்: பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாதம் பேசிய வரும் அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்களை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த வேளையில் அம்ரித்பால் சிங்கை பிடிக்க போலீசார் சினிமாவை விஞ்சி சேஸ் செய்த நிலையில் கடைசி நேரத்தில் அவர் தப்பினார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பையும், பஞ்சாப்பில் பதற்றத்தையும் ஏற்படுத்திய நிலையில் அவர் தப்பித்தது எப்படி? என்ற தகவல் கிடைத்துள்ளது.
பஞ்சாப்பில் சீக்கியர்கள் அதிகமாக உள்ளனர். அங்கு காலிஸ்தான் தனிநாடு தொடர்பான பிரசாரத்தை சிலர் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த பிரசாரம் தலைத்தூக்காமல் இருந்தது. தற்போது மீண்டும் தலைத்தூக்கி உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் அம்ரித்பால் சிங். இவர் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவராக உள்ள இவர் தான் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையை தற்போது தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.
இவரது உதவியாளரான லவ்ப்ரீத் டூபன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து அம்ரித்பால் சிங் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அம்ரித்பால் சிங்கை கட்டுப்படுத்த பஞ்சாப் போலீசார் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வந்தனர். இந்நிலையில் தான் நேற்று அம்ரித்பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை ஜலந்தர் மாவட்டம் மெகத்பூர் பகுதியில் பஞ்சாப் போலீஸார் நேற்று கைது செய்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஆதரவாளர்கள் சிக்கிய நிலையில் அம்ரித்பால் சிங் எஸ்கேப்பானார். இதையடுத்து மாநிலத்தில் இண்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டது.
போலீசில் சிக்காத அம்ரித்பால் சிங்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரை பிடிக்க முயன்றபோது கடைசி நொடியில் அம்ரித்பால் சிங் தப்பியோடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது ஜலந்தரில் அவரை போலீஸார் கைது செய்ய முயன்றனர். ஆனால் இத்தகவலை முன்கூட்டியே அறிந்த அம்ரித்பால் சிங் போலீஸ் விரட்டுவதை பார்த்து மோட்டார் சைக்கிள், கார் என மாறி மாறி தப்பியுள்ளார். மேலும் அம்ரித் பால் சிங்கை தேடப்படும் குற்றவாளியாக பஞ்சாப் போலீசார் அறிவித்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க அவர் எப்படி தப்பினார்? என்ற பரபரப்பான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதுபற்றி ஜலந்தர் போலீஸ் கமிஷனர் குல்தீப் சிங் சாஹல் கூறுகையில், ‘நேற்றைய தேடுதல் வேட்டையின் போது அம்ரித் பால் சிங், அவரது ஆதரவாளர்கள் சிலருடன் தப்பி சென்றுவிட்டார். விரைவில் அம்ரித்பால் சிங் கைது செய்யப்படுவார். இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அம்ரித்பால் சிங் மீது 6 முதல் 7 வழக்குகள் உள்ளன. ந்த அதிரடி நடவடிக்கையின்போது துப்பாக்கி பயன்படுத்த வேண்டாம் என நாங்கள் நினைத்தோம். இதனால் அவரை 16-17 கிமீ தூரம் துரத்தினோம். இறுதியாக அம்ரித்பால் சிங் மக்கள் கூட்டத்துக்குள் நுழைந்து தப்பினார். இந்த வேளையில் அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் வேண்டுமென்றே மோட்டார் சைக்கிள்களில் வந்து மோதினர். போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இந்த செயல்கள் நடந்தன. இந்த மொத்தம் சம்பவத்தில் 6 போலீசார் காயமடைந்தனர்” என்றார்.
இந்நிலையில் தான் போலீசாரின் தேடுதல் வேட்டையில் இருந்து தப்பித்தது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. நேற்று ஜலந்தரின் ஷாகோட் பகுதியில் அம்ரித்பால் சிங் சென்றார். அவரை போலீசார் சுற்றி வளைத்தனர். சினிமா பாணியில் கார், பைக்குகளில் ஏறி தப்பித்து உள்ளார். தற்போது அவர் எங்கு உள்ளார்? என்ற தகவல் கிடைக்கவில்லை. அவரை போலீசார் தொடர்ந்து தேடிவருகின்றனர்.