கோவை சிங்காநல்லூர், காமராஜ் ரோட்டில் பழைய இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் ஷோரூம் உள்ளது .இங்கு சபரி சீனிவாசன் (வயது 34) என்பவர் மேனேஜராக உள்ளார் .இந்த ஷோரூமில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று இந்த ஷோ ரூமுக்கு ஒரு வாலிபர் வந்தார் .அவர் மேலாளர் சபரி சீனி வாசனை சந்தித்து குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரைக் கூறி அந்த பெயரில் உள்ள மொபட் தனக்கு விலைக்கு வேண்டும் என்று கேட்டார். அவர் கடையில் உள்ள ஊழியரிடம் கூறி அந்த நபர் கேட்கும் மொபட்டை காண்பிக்குமாறு கூறினார் . அதன்படி ஊழியர் ஒருவர் அந்த வாலிபருக்கு காண்பித்தார். அப்போது அதில் ஒரு மொபட்அந்த நபருக்கு பிடித்தது. உடனே அதன் விலை மற்றும் அந்த தயாரிக்கப்பட்ட ஆண்டு ஆகிய விவரங்களை கேட்டறிந்தார். தனக்கு அந்த மொபட் மிகவும் பிடித்திருப்பதாக கூறினார் .அத்துடன் அதை ஓட்டிப் பார்க்கலாமா? என்று கேட்டார் . தாராளமாக ஓட்டி பார்க்கலாம் என்று கூறினார். இதையடுத்து அந்த வாலிபருடன் கடையில் வேலை செய்யும் நவீன் என்பவரையும் அனுப்பி வைத்தனர். மொபட்டின் பின்னால் நவீன் அமர்ந்திருந்தார். இருவரும் சிறிது தூரம் சென்றதும் ஒரு இடத்தில் அந்த நபர் மொபட்டை நிறுத்தினார் .அவர் நீங்கள் இங்கு நில்லுங்கள். நான் மட்டும் தனியாக மொபட்டை ஓட்டி பார்த்து வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார். 1 மணி நேரமாகியும் அந்த வாலிபர் திரும்பி வரவில்லை .இதனால் சந்தேகம் அடைந்த நவீன் இது குறித்து தனது மேனேஜர் சபரி சீனிவாசனுக்கு தகவல் கொடுத்தார். அது கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் சம்பவ இடத்துக்கு சென்றார். நவீனுடன் சென்று அந்த நபரைபல இடங்களில் தேடிப்பார்த்தார். கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து சபரி சீனிவாசன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நூதன முறையில் மொபட்டை திருடிய அந்த வாலிபரை தேடி வருகிறார்கள்..